IND Vs Pak: ஆசியக்கோப்பை, இந்தியா Vs பாகிஸ்தான்.. கனமழைக்கு அதிக வாய்ப்பு.. போட்டி ரத்தானால் ரிசர்வ் டே இருக்கா?
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசியக்கோப்பை கிரிக்கெட்:
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை நடந்த 2 லீக் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்:
தொடரில் மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி, இலங்கையில் உள்ள கண்டி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. ஆசியாவை சேர்ந்த இரண்டு பெரிய அணிகள் மோதுவதை காண தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். குறிப்பாக 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, முதன்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளன. இதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை:
அதேநேரம், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது அதிகப்படியான கருமேக கூட்டத்துடன் கனமழைய பொழிய 94 சதவிகிதம் வரை வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் எச்சரித்துள்ளன. போட்டி பிற்பகல் 3 மணியளவில் தொடங்க உள்ள நிலையில், நாளின் இரண்டாவது பாதியில் மழை பொழிய 99 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை போட்டியை நாளை நடத்தமுடியாமல் போனால், அடுத்து என்ன நடக்க வாய்ப்புள்ளது என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ரிசர்வ் டே?
சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளின் போது, மழை பெய்தால் அதற்கு ரிசர்வ் டே என ஒருநாள் ஒதுக்கப்படும். அந்த மாற்று நாளில் போட்டி நடத்தப்படும். ஆனால், ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டிக்கு ரிசர்வ் டே வாய்ப்பு பயன்படுத்தப்படமாட்டாது.
இந்திய அணிக்கான வாய்ப்புகள்?
லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் தான், இரண்டு பிரிவுகளில் இருந்தும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். எனவே, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மழையால் ரத்தானால், நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகிவிடும். இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முழுமையாக நடைபெற்று, இந்திய அணி வெல்ல வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.