WI vs IND 3 ODI: வெஸ்ட் இண்டீஸை வெளுத்து வாங்கிய இந்திய இளம்படை; போட்டியோடு தொடரையும் வென்று அசத்தல்
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. ஏற்கனவே இந்திய அணி டெஸ்ட் தொடரையும் வென்றிருந்தது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று வகை கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகள் ஏற்கனவே முடிந்து விட்டது. இதில் இந்திய அணி முதல் போட்டியையும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது போட்டியையும் வென்றது. இந்நிலையில் மூன்றாவது போட்டி ட்ரைனிடாட் பகுதியில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சொதப்பியதால், இந்த போட்டியில் பேட்டிங் ஆர்டர் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி பேட்டிங் ஆர்டரில் பெரிய மாற்றங்கள் இன்றிதான் களமிறங்கியது. கடந்த இரண்டு போட்டிகளிலும் ஒரு இன்னிங்ஸ் கூட 50 ஓவர்கள் விளையாடப்படவில்லை. இம்முறை பேட்டிங்கில் மிகவும் பொறுப்பாகவும் சிறப்பாகவும் ஆடிய இந்திய அணி முழுமையாக 50 ஓவர்கள் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் துவக்க ஜோடி சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் வந்தவர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளிக்க இந்திய அணியின் ரன்ரேட் சீராகவே உயர்ந்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் க்ளாசிக்கான ஒரு ஆட்டத்தை ஆடி அரைசதம் விளாசினார். இறுதியில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடி காட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியில் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் துல்லியமான பந்து வீச்சாலும், அட்டகாசமான ஃபீல்டிங்காலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் ஆர்டர் முற்றிலும் நொறுக்கப்பட்டது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் எடுத்ததே டைல் - எண்ட் பேட்ஸ்மேனான குடகேஷ் மோட்டை மட்டும் 39 ரன்கள் சேர்த்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகுர் 4 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. ஏற்கனவே டெஸ்ட் தொடரையும் வென்றிருந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி தொடங்கவுள்ளது.