Virat Kohli Step Down : "விராட்கோலி பக்குவமானவர்; ஆனால், ஈகோவை விட்டுத்தர வேண்டும்" - கபில்தேவ்
இளம் வீரரின் தலைமையின் கீழ் விளையாட விராட்கோலி அவரது ஈகோவை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக விராட்கோலி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அவரது அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், கோலியின் பேட்டிங் நலன் கருதி அவரது முடிவை வரவேற்பதாக பலரும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியிருப்பதாவது, “ விராட்கோலியின் முடிவை நான் வரவேற்கிறேன். டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது முதல் அவர் கடினமான காலகட்டத்தை அனுபவித்தார். சமீபகாலமாக பதட்டமாகவே காணப்பட்ட அவர் அதிக அழுத்தத்திலே இருந்தார். இதன்காரணமாக, தனது கேப்டன்சியை விட்டுக்கொடுத்து சுதந்திரமாக விளையாட தேர்வு செய்துள்ளார்.
விராட்கோலி பக்குவமானவர். இந்த முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு அவர் கடுமையாக யோசித்திருக்க வேண்டும் என்று நான் உறுதியாக சொல்கிறேன். ஒருவேளை விராட்கோலி கேப்டன்சியை மகிழ்ச்சியாக அனுபவிக்காமல் இருந்திருக்கலாம். நாம் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவரை வாழ்த்தி ஆதரவாக இருக்க வேண்டும்.
சுனில் கவாஸ்கர் எனது தலைமையின்கீழ் விளையாடினார். நான் ஸ்ரீகாந்த் மற்றும் அசாருதீன் தலைமையில் விளையாடினேன். எனக்கு எந்தவித ஈகோவும் இல்லை. ஒரு இளம் வீரர் தலைமையின்கீழ் விளையாட விராட்கோலியும் அவரது ஈகோவை விட்டுக்கொடுக்க வேண்டும். இது அவருக்கு மட்டுமின்றி இந்திய கிரிக்கெட்டுக்கும் உதவும். புதிய கேப்டனை விராட்கோலி வழிநடத்த வேண்டும். புதிய வீரர்களை வழிநடத்த வேண்டும். நாம் விராட்கோலி எனும் பேட்ஸ்மேனை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது.” இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுத்தந்தவர் என்ற சாதனை தன்வசம் வைத்துள்ளவர் விராட்கோலி. விராட்கோலி தலைமையில்தான் இந்திய அணி டெஸ்டில் நம்பர் 1 சாதனையை பிடித்தது. ஆஸ்திரேலியாவில் இரு முறை தொடரை வென்றது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு லார்ட்ஸ், ஓவல் மைதானத்தில் விராட்கோலி தலைமையில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Alanganallur Jallikattu Live: குலுங்கும் அலங்கை.. இது உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு... ABP நாடு நேரலை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்