Virat Kohli : புதிய உலக சாதனை படைப்பாரா விராட்கோலி...? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...!
இன்று இந்தியா தனது மூன்றாவது ஆட்டத்தை பெர்த்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் நிலையில் இந்த சாதனையை கோலி முறியடிப்பார் என்றும் ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் அதிரடி காட்டி வரும் விராட் கோலி ஒட்டுமொத்த உலகக்கோப்பை போட்டிகளில் ஒரு பெரும் சாதனையை புரிய அவருக்கு இன்றைய போட்டியில் வெறும் 28 ரன்களே தேவைப் படுகிறது.
கெயிலை முந்திய கோலி
நடப்பு டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி அதிரடி ஃபார்மில் உள்ளார். பாகிஸ்தான், நெதர்லாந்துக்கு எதிரான முதல் இரு போட்டிகளிலும் அரை சதங்களை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். வியாழக்கிழமை நெதர்லாந்திற்கு எதிராக இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போட்டியில், 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் எடுத்தார் விராட் கோலி.
அவர் இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி மொத்தம் 144 ரன்கள் குவித்துள்ளார். நெதர்லாந்து அணிக்கு எதிரான அதிரடி ஆட்டத்திற்கு பிறகு, டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் கிறிஸ் கெயிலைக் கடந்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார் கோலி.
உலக சாதனை புரிவாரா?
23 போட்டிகளில் 989 ரன்கள் குவித்துள்ளதுடன் அவர் 965 ரன்கள் எடுத்துள்ள கெயிலின் சாதனையை தாண்டி சென்றுள்ள நிலையில் இலங்கையின் மஹேல ஜெயவர்த்தனாவின் சாதனையை முறியடிக்க இன்னும் அவருக்கு 28 ரன்கள் மட்டுமே தேவை. அவர் டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் 31 போட்டிகளில் 1016 ரன்களைக் குவித்துள்ளார். இந்த நிலையில் இன்று இந்தியா தனது மூன்றாவது ஆட்டத்தை பெர்த்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த சாதனையை இந்த போட்டியில் கோலி முறியடிப்பார் என்றும் ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்: சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் - திடீரென அறிவித்த கருணாஸ்..! நடந்தது என்ன..?
டி20 உலகக் கோப்பைகளில் அதிக ரன்கள்
- மஹேல ஜெயவர்த்தனே (இலங்கை) - 31 போட்டிகளில் 1016 ரன்கள்
- விராட் கோலி (இந்தியா) - 23 போட்டிகளில் 989 ரன்கள்
- கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) - 33 போட்டிகளில் 965 ரன்கள்
- ரோஹித் சர்மா (இந்தியா) - 35 போட்டிகளில் 904 ரன்கள்
- திலகரத்னே தில்ஷன் (இலங்கை) - 35 போட்டிகளில் 897 ரன்கள்
நெதர்லாந்து போட்டி
இதற்கிடையில், நெதர்லாந்து போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரை சதம் விளாசியதால், இந்திய அணியால் வலுவான ஸ்கோரை நிர்ணயிக்க முடிந்தது. ரோஹித் 39 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிலையில், சூர்யகுமார் யாதவ் வெறும் 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பந்துவீச்சாளர்களில், வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். சுழற்பந்து வீச்சாளர்கள் அக்சர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் நெதர்லாந்து வீரர்களை மடக்கி தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்திய அணி தற்போது தனது மூன்றாவது போட்டியை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று மாலை 4.30 மணிக்கு பெர்த்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.