14 Years of Virat Kohli: 14 ஆண்டுகளுக்கு முன்பு... இதே நாள்.! பெருமையை நெகிழ்ச்சியாய் பகிர்ந்த விராட் கோலி!
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இதே நாளில் முதல் முறையாக களமிறங்கினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆசிய கோப்பை போட்டிக்காக தயராகி வருகிறார். இவர் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதன்காரணமாக அவர் மீது அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி கால்பதித்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளன. இதை நினைவு கூறும் வகையில் விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “14 ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் தொடங்கிய பயணம்.. இது எனக்கு பெருமையான ஒன்று” எனப் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி இலங்கையின் டம்புள்ளா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி முதல் முறையாக களமிறங்கினார். அந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இவர் இந்திய அணியில் இடம்பிடித்தார். அப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விராட் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அன்று முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி ஒரு அசைக்க முடியாத நபராக உருவெடுத்தார்.
இந்த 14 ஆண்டுகளில் விராட் கோலி 262 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12344 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் 102 டெஸ்ட் போட்டிகளில் 8074 ரன்களும், 99 டி20 போட்டிகளில் 3308 ரன்களும் அடித்து அசத்தியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 43 சதமும், டெஸ்ட் போட்டியில் 27 சதமும் அடித்துள்ளார். மொத்தமாக அவர் 70 சதங்களை அடித்து அசத்தியுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் கோலி மீண்டும் தன்னுடைய ஃபார்மிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சதம் அடித்து சுமார் 990 நாட்களுக்கு மேலாகி உள்ளது. எனவே ஆசிய கோப்பை தொடரில் இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஏகத்துடன் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்