Kohli Test Records: வெற்றியின் மறுபெயர் விராட்..! டெஸ்ட்டில் கோலியின் விஸ்வரூப சாதனைகள் என்னென்ன தெரியுமா..?
இந்திய அணியை ஆக்ரோஷமான அணியாகவும், விடாமுயற்சியுடன் போராடும் அணியாக, மன உறுதி மிக்க அணியாக மாற்றியதில் விராட்கோலியின் பங்கு தவிர்க்க முடியாதது.
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் விராட்கோலி. மூன்றுவடிவ போட்டிகளிலும் நம்பர் 1 கிரிக்கெட் வீரராக வலம் வரும் விராட்கோலி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். அவரது ராஜினாமாவால் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதிக டெஸ்ட் வெற்றி :
தென்னாப்பிரிக்க தொடரில் தோல்வியடைந்திருந்தாலும் ஒரு டெஸ்ட் கேப்டனாக விராட்கோலி தன்வசம் பல சாதனைகளை வைத்துள்ளார். இந்திய டெஸ்ட் கேப்டன்களிலே மிகச்சிறந்த கேப்டன் விராட்கோலியே ஆவார். விராட்கோலி தலைமையில் இந்திய அணி 68 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 40 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்துள்ளார். இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் வெற்றியை பெற்றுத்தந்த கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் விராட்கோலி. 16 போட்டிகளில் மட்டுமே அவரது தலைமையில் தோல்வியடைந்தாலும், 11 போட்டிகளை டிரா செய்துள்ளது.
2014ம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரின்போது எம்.எஸ்.தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்ததால், விராட்கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது முதல் இந்திய அணியை ஏறுமுகமாகவே வழிநடத்திச் சென்றார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணி வெல்லவில்லை என்று குறை கூறினாலும், விராட்கோலியின் தலைமையில் இந்திய அணி வீறுநடை போட்டு டெஸ்டில் நம்பர் 1 என்ற மகுடத்தை சூடியது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரை அந்த நாட்டு மண்ணில் வென்றதே இல்லை என்ற மோசமான வரலாற்றுக்கு முடிவுகட்டி, புதிய வரலாற்றை விராட்கோலி தொடங்கி வைத்தார்.
ஆஸ்திரேலியாவில் தொடரை வென்று சாதனை :
1947ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவிற்கு சென்று கிரிக்கெட் ஆடி வந்த இந்திய அணி முதன்முறையாக 2018ம் ஆண்டு முதன்முறையாக விராட்கோலி தலைமையில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத பல் இல்லாத ஆஸ்திரேலியாவைத்தான் இந்தியா வென்றது என்று பலரும் விமர்சித்த நிலையில், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவ் ஸ்மித் என்று பலமிகுந்த ஆஸ்திரேலியாவை 2021ம் ஆண்டு அவர்கள் நாட்டிலே 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி மீண்டும் தொடரை வென்று அசத்தியது. விராட்கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா விளையாடிய 4 தொடரில் 3ல் இந்தியாவே வென்றுள்ளது.
தற்போது கிரிக்கெட் ஆடும் வீரர்களில் அதிக டெஸ்ட் வெற்றிகளை தன்வசம் வைத்துள்ள கேப்டனாக கோலியே வலம் வந்துள்ளார். அவர் 67 டெஸ்ட்டில் 40 வெற்றிகளுடன் ஒட்டுமொத்த அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவருக்கு முந்தைய நான்கு இடங்களில் கிரீம் ஸ்மித் (53 வெற்றி) ரிக்கி பாண்டிங் (48 வெற்றிகள்) ஸ்டீவ் வாக் ( 41 வெற்றிகள்) இடத்தில் உள்ளனர். அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் பட்டியலின் முதல் 10 இடத்தில் தற்போது கிரிக்கெட் ஆடும் ஒரே வீரர் விராட்கோலி மட்டுமே.
அரை நூற்றாண்டுக்கு பிறகு லார்ட்ஸ், ஓவலில் வெற்றி :
உலகப்புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவிற்கு பிறகு சுமார் 50 ஆண்டுகள் கழித்து, இந்தியாவை டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வைத்த கேப்டனும் விராட்கோலியே. அதேபோல, 50 ஆண்டுகளாக தோல்வியை மட்டுமே பதிவு செய்து வந்த ஓவல் மைதானத்திலும் முதன்முறையாக இந்தியாவை வெற்றி பெற வைத்தவரும் விராட்கோலியே.
சதத்தில், இரட்டை சதத்தில் சாதனை :
கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு, ஒரு வீரர் அதிக அழுத்தத்துடன் ஆடி தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுவார் என்று கூறுவார்கள். ஆனால், விராட்கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றபிறகே 7 இரட்டை சதங்களை இந்திய அணிக்காக விளாசியுள்ளார். அதேபோல, டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அதிக சதங்களை விளாசியவர் என்ற சாததைனயிலும் விராட்கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். 20 சதங்களுடன் விராட்கோலி இந்த சாதனையை படைத்துள்ளார். முதலிடத்தில் தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் 25 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் டெஸ்ட் போட்டிகளில் சதமடித்துள்ளார். இந்திய அணியை ஆக்ரோஷமான அணியாகவும், விடாமுயற்சியுடன் போராடும் அணியாக, மன உறுதி மிக்க அணியாக மாற்றியதில் விராட்கோலியின் பங்கு தவிர்க்க முடியாதது.
ரன்மெஷின் :
இதுவரை ஒட்டுமொத்தமாக விராட்கோலி 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7 ஆயிரத்து 962 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 10 முறை ஆட்டமிழக்காமல் இருந்து 27 சதங்களையும், 7 இரட்டை சதங்களையம், 28 அரைசதங்களையும் விளாசியுள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 254 ரன்கள் ஆகும். இந்திய டெஸ்ட் அணியின் சகாப்தமாகவே விராட்கோலி வலம் வந்தார். டெஸ்ட் கேப்டனாக அவர் விலகினாலும், ஒரு வீரராக விராட்கோலியின் விஸ்வரூபம் தொடரும் என்பது மட்டும் நிச்சயம் உறுதி.