Virat Kohli Retirement: என்ன அவசரம் கிங் உங்களுக்கு? டெஸ்டில் இருந்து விராட் கோலி ஓய்வு
Virat Kohli Retirement: டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் விராட் கோலி

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
விராட் கோலி:
இந்திய அணியின் ரன் மிசின் என்று அழைக்கப்படும் விராட் கோலி கடந்த 2011 வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார், இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட்கோலி இதுவரை 30 சதங்கள், 31 அரைசதங்கள் உட்பட 9230 ரன்களை குவித்துள்ளார். கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 30வது டெஸ்ட் சதத்தை விராட் கோலி பதிவு செய்திருந்தார்.
ஓய்வு:
சில நாட்களாகவே விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தகவல் வெளியானது, பிசிசிஐயும் அவரை ஓய்வு பெற வேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தான் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார், இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
”டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முதன்முதலில் எனது ப்ளூ பையை எடுத்து 14 ஆண்டுகள் ஆகின்றன; உண்மையைச் சொன்னால், இந்த பார்மெட் என்னை இப்படி அழைத்துச் செல்லும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை; என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது.. இதுவே வாழ்க்கை முழுவதும் நான் எடுத்துச் செல்லும் பாடங்களையும் கற்றுக் கொடுத்தது
வெள்ளை ஜெர்சியில் விளையாடுவதில் ஆழமான தனிப்பட்ட உணர்வு ஒன்று இருக்கிறது. அமைதியான மோதல், நீண்ட நாட்கள், யாரும் பார்க்காத சிறிய தருணங்கள் அவை எப்போதும் உங்களுடன் இருக்கும்.
நான் இந்த வடிவத்தில் இருந்து விலகும் முடிவு என்பது எளிதானது அல்ல - ஆனால் அது சரியானதாக உணர்கிறது. நான் அதற்கு என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்துள்ளேன், மேலும் நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக அது எனக்கு திருப்பித் கொடுத்துள்ளது
View this post on Instagram
நான் இதில் இருந்து விலகும் போது விளையாட்டுக்காக, நான் மைதானத்தைப் பகிர்ந்து கொண்ட சக வீரர்கள், எனது கிரிக்கெட் வாழ்கையில் வந்த ஒவ்வொரு நபருக்காகவும் நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடன் செல்கிறேன்.
எனது டெஸ்ட் வாழ்க்கையை எப்போதும் புன்னகையுடனே திரும்பிப்பார்ப்பேன் #269, signing off. 🇮🇳❤️” என்று தனது பதிவில் கோலி குறிப்பிட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து அணி உடனான டெஸ்ட் தொடரின் மூலம், அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான சுற்றுகள் தொடர்கிறது. சுமார் 2 ஆண்டுகளுக்கு இந்த போட்டிகள் நீடிக்கும். இதனை கருத்தில் கொண்டே எதிர்கால தலைமுறைக்கு வாய்ப்பளிக்கும் விதமாக கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். அதே காரணத்தால் தான், விராட் கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.





















