(Source: ECI/ABP News/ABP Majha)
"சுயநலமாக விளையாடாதீங்க… அணிக்காக விளையாடுங்க" - வர்ணனையில் பாபர் அசாமை விமர்சித்த கம்பீர்!
"உங்கள் திட்டப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், நீங்கள் ஃபகர் ஜமானை பேட்டிங் ஆர்டர் மாற்றி அனுப்பியிருக்க வேண்டும். இதுதான் சுயநலம் எனப்படும்", என்று கம்பீர் கூறினார்.
டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் இரண்டு தொடக்க ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த பிறகு பாகிஸ்தான் ஒரு வழியாக வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், பல ரசிகர்களும் விமர்சகர்களும் கேப்டன் பாபர் அசாம் மீது குற்றம் சாட்டியுள்ளனர். பாபரின் தற்போதைய பேட்டிங் பார்ம் அவருக்கும் அவரது அணிக்கும் பாதகமாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்தியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் கோல்டன் டக் ஆனார். ஜிம்பாப்வேக்கு எதிராக ஒன்பது பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் அவர் ஐந்து பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் சொதப்பினார். இப்படி தொடர்ந்து அவரது ஃபார்ம் விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீரும் விமர்சித்துள்ளார்.
சுயநல வீரர்
நெதர்லாந்துக்கு எதிரான வெற்றியின் போது, ஃபகார் ஜமான் காயத்தில் இருந்து மீண்டு, ஆடும் லெவன் அணிக்கு திரும்பினார். 13.5 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் துரத்த, ஃபகர் ஜமான் 16 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தது முக்கியமாக அமைந்தது. அந்த போட்டியில் வர்ணனையில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் பாபரை விமர்சித்தார். மேலும் அவரை ஒரு சுயநல கேப்டன் என்று அழைத்தார்.
கம்பீர் கருத்து
அவர் பேசுகையில், "எனது கருத்துப்படி, முதலில், உங்களுக்குப் பதிலாக உங்கள் அணியைப் பற்றி சிந்தியுங்கள்; உங்கள் திட்டப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், நீங்கள் ஃபகர் ஜமானை பேட்டிங் ஆர்டர் மாற்றி அனுப்பியிருக்க வேண்டும். இதுதான் சுயநலம் எனப்படும். ஒரு கேப்டனாக, சுயநலமாக இருப்பது எளிது. பாபர் மற்றும் ரிஸ்வானும் பாகிஸ்தானுக்கு ஓப்பனிங் செய்து பல சாதனைகளை படைப்பது எளிது. நீங்கள் ஒரு தலைவராக இருக்க விரும்பினால், உங்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும்", என்றார். இவரது இந்த கருத்தை கேட்ட சிலர் அவர் 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முக்கியமான கட்டத்தில் செஞ்சுரி அடிக்கும் அழுத்தத்தில் அவுட் ஆனதை குறிப்பிடுகின்றனர்.
அக்ரம், அக்தர் விமர்சனம்
நடந்து கொண்டிருக்கும் போட்டியின் போது பாபரை விமர்சித்த முதல் பிரபலம் கம்பீர் அல்ல. வாசிம் அக்ரம் மற்றும் சோயிப் அக்தர் போன்றவர்கள் கூட பாகிஸ்தான் கேப்டனை வசைபாடினர். அவரை மிடில் ஆர்டரில் பேட் செய்யலாம் என்றும் கூறினார்கள். வரும் வியாழன் அன்று பாகிஸ்தான் தனது அடுத்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு கண்டிப்பாக வெல்ல வேண்டிய நிலையில் உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது பாபரின் கேப்டன்சியில் விமர்சகர்கள் கவனம் செலுத்துவார்கள் என்பதால் ஃபார்முக்கு திரும்புவதற்கு முயற்சி செய்வார்கள் என்று தெரிகிறது.