Virat Kohli Tweet: பாகிஸ்தானோடு விளையாடுவது பதற்றமா இருக்கா? : பதில் கொடுத்த கோலியின் மாஸ் ட்வீட்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பாகிஸ்தானுடனான போட்டியில் விளையாடுவது பதட்டமாக உள்ளதா? என்பது குறித்து கேப்டன் விராட்கோலி பதிலளித்துள்ளார்.
டி20 உலககோப்பை போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 போட்டிகள் நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியிலே பாகிஸ்தானுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை மோத உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலககோப்பை போட்டிக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவது இதுவே முதல் முறை ஆகும். இதனால், இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் இந்த போட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
People: Big match on Sunday. You're nervous, right?
— Virat Kohli (@imVkohli) October 21, 2021
Me: pic.twitter.com/HXDWeKrYFR
இந்த நிலையில், இந்திய வீரர்கள் யாரும் இதுவரை பாகிஸ்தான் அணியுடனான போட்டி குறித்து எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில் விராட் கோலி ருசிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, அவர் தனது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில், மக்கள் ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய போட்டி ஒன்று உள்ளது. அதனால், நீங்கள் பதட்டமாக உணர்கிறீர்களா? என்று கேள்வி எழுப்புவதாக பதிவிட்டுள்ளார்.
அதற்கு கீழே அந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் “ராங்” அதாவது தவறு என்று வாசகம் பொறித்த டீசர்ட்டை தான் அணிந்திருப்பது போலவும், அந்த தவறு என்ற வாசகத்தை சுட்டிக்காட்டுவது போலவும் அந்த புகைப்படத்தில் விராட் கோலி உள்ளார். இதன்மூலம், பாகிஸ்தான் அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள போட்டியில் விளையாடுவதற்கு தான் பதட்டமாக இல்லை என்று விராட்கோலி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் அளித்த பேட்டியில், இந்தியாவுடனான டி20 உலககோப்பை போட்டியில் நாங்கள் வெல்வோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலககோப்பை வரலாற்றை பொறுத்தவரை இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால். இந்திய அணி நடப்பு தொடரிலும் தனது பெருமையை தக்கவைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்