T20 World Cup 2024: அடேங்கப்பா..! டி-20 உலகக் கோப்பை - பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்திய அமெரிக்கா - அசத்திய இந்தியர்
T20 World Cup 2024: ஐசிசியின் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அனுபவம் மிக்க பாகிஸ்தானை வீழ்த்தி, கத்துக்குட்டி ஆன அமெரிக்கா அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
T20 World Cup 2024: ஐசிசியின் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில், அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் வென்று அசத்தியுள்ளது.
பாகிஸ்தான் - அமெரிக்கா மோதல்:
ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று கடந்த இரண்டாம் தேதி தொடங்கி, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் இதில் பங்கேற்று இருக்க, அவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியில், குரூப் ஏ-வைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை கத்துக்குட்டியான அமெரிக்கா எதிர்கொண்டது.
The American fairytale continues 🇺🇸😍
— ICC (@ICC) June 6, 2024
USA beat Pakistan in one of the biggest results in #T20WorldCup history and are ready to take on India next.
Get your tickets now ➡️ https://t.co/FokQ0Cegga pic.twitter.com/ydqEQ3Onbx
பாகிஸ்தான் பேட்டிங்:
டெக்ஸாசில் உள்ள கிராண்ட் பிரைரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங்கை தொடர்ந்த பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 44 ரன்களை சேர்த்தார். அதேநேரம் சதாப் கான் அதிரடியாக விளையாடி 40 ரன்களை குவித்தார். மற்ற விரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை சேர்த்தது. அமெரிக்கா சார்பில் சிறப்பாக பந்துவீசிய னோஸ்துஷ் கென்ஜிகே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியை சமன் செய்த அமெரிக்கா:
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்கா அணியில், தொடக்க வீரருமான கேப்டனுமான மொனான்க் படேல் 38 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவரை தொடர்ந்து வந்த ஆண்ரீஸ் கோஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் ஆகியோரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்நிலையில் போட்டியின் கடைசி பந்தில் அமெரிக்க அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஹாரிஸ் ராஃப் வீசிய கடைசி பந்தை எதிர்கொண்ட நிதிஷ்குமார், அதனை பவுண்டரிக்கு விளாச இரண்டு அணிகளின் ஸ்கோரும் சமனில் முடிந்தது.
சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்திய அமெரிக்கா:
இதையடுத்து போட்டி சூப்பர் ஓவருக்கு நகர்ந்தது. முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி, 18 ரன்களை சேர்த்தது. எக்ஸ்ட்ராக்கள் மூலம் மட்டுமே, பாகிஸ்தான் அணி 7 ரன்களை விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து களமிறங்கியபோது, சவுரப் நேத்ராவால்கரின் துல்லியான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியமால் பாகிஸ்தான் அணி திணறியது. இதனால், சூப்பர் ஓவர் முடிவில், ஒரு விக்கெட்டை இழந்து 13 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தில் முழு நேர உறுப்பினராக இன்றி, பாகிஸ்தானை வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையை அமெரிக்க அணி படைத்துள்ளது. அந்த அணிக்காக சூபார் ஓவரை வீசிய நேத்ராவால்கர், 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.