Watch Video: மனைவி முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை சீண்டிய ரசிகர்.. பாய்ந்து அடிக்க ஓடியதால் பரபரப்பு..!
ஹரிஸ் ரவூப், ஒரு ரசிகருடன் கடும் சண்டை போடுவது போல் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெளியேறியது. அதனை தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையிலும் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றை கூட தொடாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது.
2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் வெளியேறிய பிறகு, அந்த அணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் பாகிஸ்தான் அணிக்குள் ஒற்றுமை இல்லை, தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர் என்றெல்லாம் கூறி விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்தநிலையில், பாகிஸ்தானின் ஒரு சில வீரர்கள் விடுமுறைக்காக அமெரிக்காவில் தங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் அணியும் அதன் வீரர்களும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப்பின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஹரிஸ் ரவூப், ஒரு ரசிகருடன் கடும் சண்டை போடுவது போல் காட்சியளிக்கிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Haris Rauf Fight
— Maghdhira (@bsushant__) June 18, 2024
His wife tried to stop her.
Haris- Ye indian ho hoga
Guy- Pakistani hu @GaurangBhardwa1 pic.twitter.com/kGzvotDeiA
இதன் போது ஹரீஸ் மிகவும் கோபமாக இருப்பதையும், அப்போது அவரது மனைவி சமாதானப்படுத்த முயற்சிப்பதை வீடியோவில் காணலாம். ஆனால் கோபத்தில் கொதித்தெழுந்த ஹரிஸ், தனது செருப்புகளை கழட்டியபடி, அந்த ரசிகரை நோக்கி வேகமாக ஓடுகிறார். இதையடுத்து அங்கு நின்றிருந்த காவலர்கள் பிரச்னையை சமாளிக்க முயன்றனர். அங்கு கூடியிருந்த மற்றவர்கள் இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்படுவதற்கு முன் தடுத்து நிறுத்தினர். அந்த வீடியோவில், ஹரிஸ், “இது உங்கள் இந்தியா அல்ல” என்று கோபமாக கூறுவதைக் கேட்க முடிகிறது. அதற்கு அந்த ரசிகர், "நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன்" என்று பதிலளித்தார் . மேலும் வீடியோவில், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஏதோ சொல்கிறார்கள். ஆனால் அது தெளிவாக கேட்கவில்லை.
டி20 உலகக் கோப்பையில் ஹரிஸ் ரவூப்பின் செயல்திறன் எப்படி..?
ஹாரிஸ் ரவூப் தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட்டி சிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ரவூப், 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், அமெரிக்காவுக்கு எதிராக 37 ரன்களுக்கு 1 விக்கெட்டும், கனடாவுக்கு எதிராக ரவூப் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் 17 ரன்களுக்கு 1 விக்கெட் வீழ்த்தினார். இருப்பினும், 2024 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8-ஐ பாகிஸ்தானால் எட்ட முடியவில்லை.
பாகிஸ்தான் எப்படி..?
2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் நான்கு போட்டிகளில் விளையாடியது. தனது முதல் லீக் போட்டியில் அமெரிக்காவிற்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் தோல்வியை சந்தித்து அதிர்ச்சியை அளித்தது. இதன் பிறகு இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் தொடர்ந்து வெற்றி பெற்றது. கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்திலும், அயர்லாந்துக்கு எதிராக 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.