AUS vs PAK, Head to Head: பாகிஸ்தானா? ஆஸியா? டி20 இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்?
உலககோப்பை டி20 தொடரில் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலககோப்பை டி20 தொடர் இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் மோதப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் இன்று துபாய் மைதானத்தில் களமிறங்குகிறது.
பாகிஸ்தான் அணியும், ஆஸ்திரேலிய அணியும் இதுவரை டி20 போட்டிகளில் 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணி 13 முறை வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 9 முறை வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெற உள்ள துபாய் மைதானத்திலும் பாகிஸ்தானே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் துபாய் மைதானத்தில் இதுவரை 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 2 முறை வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் பாகிஸ்தான் அணி மூன்று முறையும், ஆஸ்திரேலியா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. உலககோப்பை டி20 போட்டித்தொடரில் இரு அணிகளும் இதுவரை 6 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளது. அதில் இரு அணிகளும் தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி 9 முறை முதலில் பேட் செய்தும், 4 முறை சேசிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 4 முறை முதலில் பேட் செய்தும், 5 முறை சேசிங் செய்தும் பேட் செய்துள்ளது.
பாகிஸ்தான் அணி சார்பில் தனிநபர் அதிகபட்சமாக உமர் அக்மல் 94 ரன்களையும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிகபட்சமாக கம்ரான் அக்மல் 366 ரன்களையும் குவித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் தனிநபர் அதிகபட்சமாக ஷேன்வாட்சன் 87 ரன்களையும், பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்சமாக டேவிட் வார்னர் 348 ரன்களையும் குவித்துள்ளனர்.
பாகிஸ்தான் அணி தரப்பில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சயீத் அஜ்மல் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பாகிஸ்தான் தரப்பில் சிறந்த பந்துவீச்சாக உமர்குல் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜேம்ஸ் பாக்னர் 27 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடந்த கால வரலாறுகள் ஆஸ்திரேலியாவை விட பாகிஸ்தானே வலுவாக இருப்பதை காட்டுகிறது. நடப்பு தொடரிலும் மற்ற அனைத்து அணிகளை காட்டிலும் பாகிஸ்தான் அணியே மிகுந்த வலுவான அணியாக திகழ்ந்து வருகிறது. குரூப் 2 பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணி இந்தியா, நியூசிலாந்து, ஆப்கான், நமீபியா, ஸ்காட்லாந்து என்று தாங்கள் எதிர்த்து ஆடிய அனைத்து அணிகளையும் வீழ்த்தியது.
பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம், பகர்ஜமான், ஹபீஸ், ஷோயிப் மாலிக் பேட்டிங்கிற்கு வலுவாக உள்ளனர். பந்துவீச்சில் ஷாகின்ஷா அப்ரிடி சிம்மசொப்பனமாக உள்ளார். அதேபோல, ஹசன் அலி, ஹரிஷ்ராப், ஷதாப்கான், இமாத் வாசிம் ஆகியோரும் பந்துவீச்சில் பக்கபலமாக உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், மிட்ஷெல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் பேட்டிங் வரிசைக்கு வலுசேர்க்கின்றனர். பந்துவீச்சில் பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசல்வுட் ஆகியோர் வலுசேர்க்கின்றனர். முதல் முறை சாம்பியன் ஆவதற்கு ஆஸ்திரேலியாவும், மீண்டும் சாம்பியன் ஆவதற்கு பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு செல்ல முனைப்பு காட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பது மட்டும் உறுதி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்