UAPA Against Kashmir Students: பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக காஷ்மீர் மாணவர்கள் மீது குற்றச்சாட்டு : ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
உலககோப்பையில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 151 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி எந்த விக்கெட்டையும் இழக்காமல் 152 ரன்களை அடைந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலககோப்பை வரலாற்றில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியதே கிடையாது என்ற கரும்புள்ளிக்கு பாபர் அசாம் தலைமையிலான அணி முற்றுப்புள்ளி வைத்தது.
இந்திய அணியின் தோல்வி நாடு முழுவதும் பலருக்கும் அதிர்ச்சி அளித்து வரும் நிலையில், ஜம்மு-காஷ்மீரில் எதிர்மறையான நிகழ்வு நடைபெற்றுள்ளது. காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் உள்ள இரண்டு மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கிரிக்கெட் பார்த்துள்ளனர். அப்போது, இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதை கண்டதும் இரண்டு கல்லூரிகளிலும் மாணவர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கின்றனர்.
அப்போது, சில மாணவர்கள் இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்புகின்றனர். மேலும், சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்புகின்றனர். இதை அங்கிருந்த சில மாணவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தானின் வெற்றியை ஸ்ரீநகர் மாணவர்கள் கொண்டாடும் இந்த வீடியோ சமூக வலைதளங்கிளில் வைரலாகியது. அந்த வீடியோவில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் இருப்பதை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, ஸ்ரீநகரில் உள்ள சௌரா காவல் நிலையம் மற்றும் கரண்நகர் காவல் நிலையத்தில் அந்த கல்லூரிகளின் விடுதி வார்டன், கல்லூரி மாணவர்கள், ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மருத்துவ கல்லூரிகளில் ஒன்று அரசு மருத்துவ கல்லூரி ஆகும். மற்றொரு கல்லூரியின் பெயர் ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ கல்வி நிறுவனம் ஆகும்.
இதுதொடர்பாக, காஷ்மீர் ஐ.ஜி. விஜயகுமார், இந்தியாவிற்கு எதிராக கோஷமிட்டவர்கள் மீது நாங்கள் வழக்குப்பதிவு செய்துள்ளோம் என்றார். அதேசமயம், காஷ்மீர் போலீசார் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களில் சில வீடியோக்கள் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டவை. சில வீடியோக்கள் மட்டுமே கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டவை. அந்த வீடியோக்களின் அடிப்படையிலே ஊபா சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர். ஊபா என்பது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச்சட்டம் என்பது ஆகும். நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்