Gautam Gambhir: கம்பீரால் நீண்ட நாட்கள் பயிற்சியாளராக நீடிக்க முடியாது.. டி20 உலகக்கோப்பை வின்னர் ஜோகிந்தர் ஷர்மா
2007 டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய வீரர் ஜோகிந்தர் ஷர்மா கம்பீர் குறித்து பேசி இருக்கிறார்
இந்தியா - இலங்கை:
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இச்சூழலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.
முன்னதாக கடந்த டி20 உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றார். அதன்படி அவரது தலைமையில் இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்க முடியாது:
இந்த நிலையில் தான் 2007 டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய வீரர் ஜோகிந்தர் சர்மா கம்பீர் குறித்து பேசி இருக்கிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "கம்பீர் தான் இப்போது இந்திய அணியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்லும் பயிற்சியாளராக உள்ளார். ஆனால் கவுதம் கம்பீரால் அந்த பொறுப்பில் நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.
ஏனென்றால் அனைத்து விஷயங்களிலும் கம்பீரிடம் ஒரு முடிவு இருக்கும். ஆனால் அந்த முடிவு வீரர்களுக்கு ஏற்றுக் கொள்ளபடியாக இருக்காது. நான் விராட் கோலியை பற்றி பேசவில்லை. ஏனென்றால் பல்வேறு சூழ்நிலைகளிலும் கம்பீரின் முடிவுகள் அப்படிதான் இருக்கும்அவரின் முடிவில் பலருக்கும் உடன்பாடு இருக்காது. யாராக இருந்தாலும், எந்த வீரராக இருந்தாலும் நேரடியாக முகத்திற்கு முன் கருத்து சொல்லக் கூடியவர் கவுதம் கம்பீர்.
ஆனால் கம்பீரின் செயல்பாடுகளில் 100 சதவிகிதம் நேர்மையும், உண்மையும், உழைப்பும் இருக்கும். இந்தியாவின் வெற்றிக்காக அனைத்தையும் செய்யக் கூடியவர்"என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜோகிந்தர் ஷர்மா கூறியுள்ளார்.