Wanindu Hasaranga: அணிக்கு வந்ததும் கேப்டன் பதவி? ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்காவிற்கு ஆஃபர் கொடுத்த இலங்கை கிரிக்கெட்!
இலங்கை டி20 அணியின் கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாகவே நல்லதொரு கேப்டன் இன்றி தத்தளித்து வருகிறது. இந்தநிலையில், இலங்கை டி20 அணியின் கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடும்போது காயம் காரணமாக வெளியேறினார். அன்றிலிருந்து இன்று வரை இலங்கை அணியில் விளையாடாத அவர், தற்போது கேப்டனாக திரும்புவார் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பையில் காயம் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் கேப்டன்கள் யார்? யார்?
இலங்கை டி20 அணிக்கு வனிந்து ஹசரங்கா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதே நேரத்தில் டெஸ்ட் கேப்டனாக திமுத் கருணாரத்னே நீடிப்பார் என்பது உறுதியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் ஒருநாள் அணிக்கு குஷல் மெண்டீஸ் தொடர்பார் என்று கூறப்படுகிறது.
வருகின்ற ஜனவரி மாதம் ஜிம்பாப்வே அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு, வருகின்ற திங்கட்கிழமை மீண்டும் கூடி முடிவெடுக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்கா ஒரு முக்கியமான ஆல்ரவுண்டராக இருந்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
Wanindu Hasaranga appointed as the new captain of Sri Lanka in T20I. [Sports Pavilion] pic.twitter.com/Pnb1ZF5ZdT
— Johns. (@CricCrazyJohns) December 29, 2023
ஹசரங்காவை விடுவித்த ஆர்சிபி:
இலங்கை அணியில் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்காவை இந்த ஆண்டு ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) விடுவித்தது. அதனை தொடர்ந்து கடந்த 19ம் தேதி நடைபெற்ற ஏலத்தில் ஹசரங்காவை ரூ.1.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.
ஜனவரி 6 ஆம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. அதன் பிறகு மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரும் நடைபெறவுள்ளது. இந்த அனைத்து போட்டிகளும் ஆர் கொழும்பில் உள்ள பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வனிந்து ஹசரங்கா கிரிக்கெட் வாழ்க்கை எப்படி..?
இலங்கை ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 4 டெஸ்ட், 48 ஒருநாள் மற்றும் 58 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றாலும், தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். அவர் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும், பேட்டிங் செய்து, 1 அரை சதத்தின் உதவியுடன் 196 ரன்கள் எடுத்துள்ளார்.
இது தவிர, ஹசரங்கா ஒருநாள் போட்டியில் 47 இன்னிங்ஸ்களில் 67 விக்கெட்டுகளையும், 42 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 4 அரை சதங்களின் உதவியுடன் 832 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம், சர்வதேச டி20யில் 56 இன்னிங்ஸ்களில் 91 விக்கெட்டுகளையும், 49 இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 1 அரைசதம் உட்பட 533 ரன்களையும் எடுத்துள்ளார்.