SA vs BAN Innings Highlights: டி காக் - 174, க்ளாசன் - 90, மார்க்ரம் - 60; தர்ம அடி வாங்கிய வங்காள தேசத்துக்கு ரன்கள் 383 இலக்கு
SA vs BAN Innings Highlights: தொடக்க வீரராக களமிறங்கி 140 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் விளாசி 174 ரன்கள் சேர்த்த நிலையில் குயின்டன் டி காக் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
South Africa vs Bangladesh:
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிகெட் 2023 தொடரில் இதுவரை 22 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. 10 அணிகள் களமிறங்கியுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகள் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், இந்த தொடர் தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது.
இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 24ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்காளதேச அணிகள் மோதிக்கொண்டது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி தென்னாப்பிரிக்கா அணியின் இன்னிங்ஸை டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் தொடங்கினர். வங்காள தேசத்தின் பந்து வீச்சினை சிறப்பாக எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 36 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
பவர்ப்ளேவிற்குள் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றிய வங்காள அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைபெறச் செய்ய தவறிவிட்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு கை கோர்த்த டி காக் மற்றும் மார்க்ரம் கூட்டணி வங்காள தேச பந்து வீச்சினை சிரமமின்றி எதிர்கொண்டனர். இதனால், தென்னாப்பிரிக்கா அணி மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீண்டு வலுவான நிலைக்குச் சென்றது. டி காக் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அவ்வப்போது அடித்து வந்தார். அதேபோல் மார்க்ரம் பந்தை தூக்கி அடிக்க முயற்சி செய்யாமல் பவுண்டரிகள் மீது கவனம் செலுத்தி ரன்கள் சேர்த்து வந்தார்.
இருவரும் அரைசதம் கடந்து மிகவும் நிலையான ஆட்டத்தினை ஆடிவந்த நிலையில், தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் தனது விக்கெட்டினை வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பந்தில் இழந்து வெளியேறினார். இவர், 69 பந்தில் 7 பவுண்டரி விளாசி 60 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இக்கட்டான சூழலில் கைகோர்த்த இந்த கூட்டணி 138 பந்துகளை எதிர்கொண்டு 131 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது.
அதன் பின்னர் வந்த ஹென்றிச் க்ளாசன் அதிரடியாக சிக்ஸர்கள் விளாசத் தொடங்கினார். இதற்கிடையில் சிறப்பாக விளையாடி வந்த டி காக் 101 பந்தில் தனது சதத்தினை நிறைவு செய்தார். இதையடுத்து இவர்கள் கூட்டணி அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ரன்கள் சேர்த்து வந்த டி காக் இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக ரன்கள் விளாசியவர் என்ற பெருமையைப் பெற்றார். டி காக் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 3 சதங்கள் விளாசியுள்ளார்.தொடக்க வீரராக களமிறங்கி 140 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் விளாசி 174 ரன்கள் சேர்த்த நிலையில் குயின்டன் டி காக் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இந்த போட்டி இவருடைய 150வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.
அதன் பின்னரும் இமாலய சிக்ஸர்கள் பறக்கவிட்ட ஹென்றிச் க்ளாசனை கட்டுப்படுத்த முடியாமல் வங்காள தேச அணி தடுமாறியது. 49 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்த நிலையில் க்ளாசன் தனது விக்கெட்டினை 50வது ஓவரில் இழந்தார். இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்கள் சேர்த்தது.