SA vs AUS: இப்படி ஒரு சாதனையை இதுவரை யாரும் படைத்ததில்லை.. கெத்துக்காட்டும் தென்னாப்பிரிக்கா அணி!
தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் 100 ரன்களுக்கு மேல் வெற்றிபெற்ற முதல் அணி என்ற பெருமையை தென்னாப்பிரிக்கா அணி தனது வசமாக்கியது
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை வென்றது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி தனது பெயரில் சிறப்பு சாதனை படைத்துள்ளது.
அதாவது, தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் 100 ரன்களுக்கு மேல் வெற்றிபெற்ற முதல் அணி என்ற பெருமையை தென்னாப்பிரிக்கா அணி தனது வசமாக்கியது. நேற்று நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 122 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.
முதல் இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரண்டாவது போட்டியில் 123 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் பிறகு தென்னாப்பிரிக்கா தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி தொடரின் மூன்றாவது போட்டியில் 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நான்காவது போட்டியில் 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஐந்தாவது போட்டியில் 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐந்தாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 315 ரன்கள் குவித்து அசத்தியது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 87 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி 93 ரன்கள் எடுத்து முக்கியமான இன்னிங்ஸ் விளையாடினார். தொடர்ந்து, மில்லர் 63 ரன்களும், மார்கோ ஜான்சன் 47 ரன்களும் எடுத்து சப்போர்ட் செய்தனர். 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை சந்தித்தது. தென்னாப்பிரிக்கா அணிக்காக இடது கை வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். இவர் 8 ஓவர்கள் பந்துவீசி வெறும் 39 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது சிறந்த பந்துவீச்சால் தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை தென்னாப்பிரிக்க அணி படைத்தது.
தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரில் மார்னஸ் லாபுசாக்னே அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதன்படி, ஆஸ்திரேலிய வீரர் லாபுஷாக்னே 5 போட்டிகளில் 283 ரன்கள் எடுத்து கெத்து காட்டினார். இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்கா வீரர் கிளாசென் இரண்டாவது இடத்தில் இருந்தார். இவர் 5 போட்டிகளில் 243 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து, மார்க்ரம் 5 போட்டிகளில் 225 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் இருந்தார். பந்துவீச்சை பொறுத்தவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் பட்டியலில் சுழல் பந்துவீச்சாளர் கேசவ் மகராஜ் முதலிடம் பிடித்தார். இவர் 4 போட்டிகள் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரை தொடர்ந்து ஆடம் ஜம்பாவும் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.
போட்டி சுருக்கம்:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்த வந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக உள்ளே வந்த டேவிட் வார்னர் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் 34 ரன்களில் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இங்கிருந்து, மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே இடையே 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது. ஆஸ்திரேலிய அணி 124 ரன்களில் இருந்தபோது மார்ஷ் தனது விக்கெட்டை பறிகொடுக்க, அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து கொண்டே இருந்தது.
மார்னஸ் லாபுசேன் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்கோ ஜான்சன் பந்தில் அவுட்டாக, ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸ் 34.1 ஓவர்களுக்கு சுருண்டது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் 6 பேட்ஸ்மேன்களால் இரட்டை இலக்க ரன்களைக் கூட எட்ட முடியவில்லை. மார்கோ ஜான்சன் தனது 8 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை தூக்கினார்.. சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜ் 9.1 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.