(Source: ECI/ABP News/ABP Majha)
SL Vs SA WC 2023: டி காக், டு சென், மார்க்ரம் மிரட்டல் சதம்! பஞ்சரான இலங்கை பவுலிங்! 429 ரன்கள் டார்கெட்
SL Vs SA WC 2023 1st Innings Highlights:இலங்கை அணி தர்ப்பில் பத்திரானா 95 ரன்களும் வெல்லலேக 85 ரன்களும் வாரி வழங்கியுள்ளனர்.
13வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் இந்தியாவில் கடந்த 5ஆம் தேதி தொடங்கி மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 7ஆம் தேதி ஆஃப்கானிஸ்தான் வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டியும், இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டது. முதலில் நடைபெற்ற வங்காளதேசம் ஆஃப்கானிஸ்தான் போட்டியில் வங்காள தேச அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் மதியம் 2 மணிக்கு தொடங்கிய போட்டியில் இலங்கை தென் ஆப்ரிக்கா அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது. பந்து வீச முடிவு செய்த இலங்கை அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் போட்டி தொடங்கி இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தது இலங்கை பவுலிங்.
அதாவது தென் ஆப்ரிக்கா அணியின் இன்னிங்ஸை டி காக் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா தொடங்கினர். போட்டியின் இரண்டாவது ஓவரின் 4வது பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். பவுமா 5 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு பவுண்டரிகள் விளாசி 8 ரன்கள் சேர்த்திருந்தார். அதன் பின்னர் டி காக் உடன் இணைந்த டசென் இலங்கை பந்து வீச்சினை துவம்சம் செய்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி இலங்கையின் பந்து வீச்சினை சின்னபின்னமாக்கினர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் விளாசி சதத்தினை நெருங்கி வந்தனர். தொடக்கத்தில் நிதானமாக ஆடி வந்த டி காக் அரைசத்தினைக் கடந்த பின்னர் அதிரடியாக பவுண்டரிகள் விரட்டி சதம் விளாசினார். 83 பந்துகளில் சதம் விளாசிய டி காக் அடுத்த பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார். இவர் மொத்தம் 12 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் பறக்க விட்டிருந்தார்.
அதன் பின்னர் வந்த மார்க்ரம் உடன் இணைந்த டசென் தனது அதிரடி ஆட்டத்தினை தொடர்ந்ததால் சதம் விளாசி அமர்க்களப்படுத்தினார். அவர் 110 பந்தில் 108 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார். இவர் 13 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசி இருந்தார். அதன் பின்னர் வந்த க்ளாசன் 3 சிக்ஸர்கள் பறக்க விட்டு வான வேடிக்கை காட்ட, இலங்கையின் பந்துவீச்சு பஞ்சரானது. அதிரடியாக விளையாடி வந்த மார்க்ரம் 49 பந்தில் தனது சதத்தினை விளாசினார். உலகக்கோப்பை வரலாற்றில் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இறுதியில் தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி தர்ப்பில் பத்திரானா 95 ரன்களும் வெல்லலேக 85 ரன்களும் வாரி வழங்கியுள்ளனர். 428 ரன்கள் குவித்த தென் ஆப்ரிக்க அணி உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.