ICC Cricket World Cup 2023: சாதனை மேல் சாதனை.. சிக்கிய இலங்கையை சிதைத்த தென் ஆப்ரிக்கா படைத்த வரலாற்று பட்டியல் இதோ..
SL Vs SA ICC Cricket World Cup 2023: மார்க்ரம் 49 பந்துகளில் 14 பவுண்டரில் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டு அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தற்போது சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. 13வது உலகக் கோப்பையை ஐசிசியுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் நிலையில், தொடர் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது.
இலங்கை அணியின் பந்து வீச்சினை சிறப்பாக எதிர்கொண்ட தென் ஆப்ரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெறுமையைப் பெற்றது. அதேபோல் தென் ஆப்ரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் டு சென் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் மார்க்ரம் சதம் விளாசி அதகளப்படுத்தினர். இதனால் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் சதம் விளாசிய மூன்று வீரர்களைக் கொண்ட முதல் அணி என்ற பெருமையையும் தென் ஆப்ரிக்கா அணி பெற்றுள்ளது. இதில் மார்க்ரம் 49 பந்துகளில் 14 பவுண்டரில் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டு அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணிகள் லிஸ்ட்
1. தென் ஆப்ரிக்கா - 2023ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 50 ஓவர்களில் 5 விக்கெட்டினை இழந்து 428 ரன்கள் குவிப்பு
2. ஆஸ்திரேலியா - 2015 உலகக் கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 50 ஓவர்கள் 6 விக்கெட்டுகளை இழந்து 417 ரன்கள் சேர்த்தது.
3.இந்தியா - 2007 உலகக் கோப்பையில் பெர்முடாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை இழந்து 413 ரன்கள் சேர்த்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
4. தென் ஆப்ரிக்கா - 2015 உலகக் கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை இழந்து 411 ரன்கள் சேர்த்தது.
5. தென் ஆப்ரிக்கா - 2015 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை இழந்து 408 ரன்கள் சேர்த்தது.
உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த நாடுகளில் டாப் ஐந்தில் மூன்று இடங்களை தென் ஆப்ரிக்கா பெற்றுள்ளது.
அதிவேகமாக சதம் விளாசியவர்கள் விபரம்
1. மார்க்ரம் - 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிராக 49 பந்துகளில் சதம் விளாசினார்.
2. கெவின் ஓ பிரைன் - 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை அயர்லாந்து வீரர் பிரைன் இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 பந்துகளில் சதம் விளாசினார். இவரது சாதனை 13 ஆண்டுகளுக்குப் பின்னர் முறியடிக்கப்பட்டது.
3. கிளென் மேக்ஸ்வெல் - 2015ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 51 பந்துகளில் சதம் விளாசினார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் உலகக்கோப்பை தொடரில் அதிவேக சதம் விளாசியவர் என்ற பெருமை மேக்ஸ்வெல் வசம் உள்ளது.
4. ஏபி டிவிலியர்ஸ் - 2015ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 52 பந்துகளில் சதம் விளாசினார். தென் ஆப்ரிக்கா தரப்பில் இருந்த இவரது சாதனையையும் மார்க்ரம் முறியடித்துள்ளார்.
5. இயான் மோர்கன் - 2019அம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 57 பந்துகளில் விளாசினார்.