Updated Cricket World Cup 2023 Schedule: இணைந்த இலங்கை, நெதர்லாந்து.. அப்டேட் செய்யப்பட்ட புதிய ஒருநாள் உலகக் கோப்பை அட்டவணை!
இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் வருகின்ற அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற பிறகு முழு அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது.
இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் வருகின்ற அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற பிறகு முழு அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. 2023 ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய இரண்டு அணிகள் 9, 10 வது அணியாக இடம்பிடித்துள்ளன.
ஜிம்பாப்வே ஹராரேயில் நடைபெற்ற தகுதிச்சுற்று இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய இலங்கை அணி வருகின்ற அக்டோபர் 7ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தங்களது உலகக் கோப்பை லீக்கின் முதல் போட்டியில் விளையாடுகிறது. அதேபோல், வருகின்ற நவம்பர் 9ம் தேதி பெங்களூரில் நியூசிலாந்துக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியை முடிகிறது.
ஜிம்பாப்வேயில் நடந்த தகுதிச் சுற்றில் இரண்டாம் இடத்தை பிடித்த நெதர்லாந்து, பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 6ம் தேதி ஹைதராபாத்தில் தனது முதல் லீக் போட்டியிலும், நவம்பர் 11ம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டியை நடத்தும் இந்தியாவுக்கு எதிராக தனது கடைசி லீக்கில் விளையாடுகிறது.
முதல் போட்டி யார் யாருக்கு?
அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியுடன் 2023 உலகக் கோப்பை போட்டி தொடங்குகிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் கடைசி குரூப் ஸ்டேஜில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
நாக் அவுட் சுற்றுகள்:
முதல் அரையிறுதி நவம்பர் 15 புதன்கிழமை மும்பையிலும், இரண்டாவது அரையிறுதி மறுநாள் கொல்கத்தாவில் நடைபெறும். இரண்டு அரையிறுதிகளுக்கும் தலா ஒரு ரிசர்வ் நாள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடைபெறும் என்றும், நவம்பர் 20 ஆம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாக் அவுட் போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
போட்டி நடைபெறும் இடங்கள்:
ஹைதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா என மொத்தம் 10 ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. ஹைதராபாத்தைத் தவிர கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 வரை பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.