Sai Sudharsan: சாய் சுதர்சனுக்கு ஜாக்பாட்! கங்குலி, டிராவிட், கோலிக்கு அடுத்து நம்ம தமிழ் பையன்தான் - இப்படித்தான்!
Sai Sudharsan Test Debut: சவ்ரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோர் அறிமுகமான அதே நாளில் இந்திய அணிக்காக சாய் சுதார்சனும் அறிமுகமாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இ்ங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாசை இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணிக்காக இன்றைய போட்டியில் அறிமுக வீரராக சாய் சுதர்சன் இடம்பிடித்துள்ளார். அவர் இந்திய அணியில் புஜாராவின் இடமான 3வது இடத்தில் ஆட உள்ளார்.
சாய் சுதர்சனுக்கு அடித்த யோகம்:
இந்திய கிரிக்கெட் வரலாற்றைப் பொறுத்தவரையில் இந்த நாள் இந்திய அணிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். ஏனென்றால், ஜுன் 20ம் தேதியான இன்றே உலக கிரிக்கெட்டில் தங்களுக்காக தனி வரலாற்றைப் படைத்த சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி ஆகிய 3 பேரும் இதே நாளில் அறிமுகமானார்கள்.
லார்ட்ஸில் அறிமுகமான கங்குலி, டிராவிட்:
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் செல்லமாக தாதா என்று அழைக்கப்படுபவருமான சவ்ரவ் கங்குலி இதே நாளில் லண்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1996ம் ஆண்டு அறிமுகமானார். அன்றைய போட்டியில் கங்குலி மட்டுமின்றி இந்திய அணிக்காக இன்னொரு வீரராக அறிமுகமானவர் ராகுல் டிராவிட். இவரது அபாரமான பேட்டிங் திறமையால் இவரை ரசிகர்கள் பெருஞ்சுவர் என்று அழைத்தனர்.
இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத வீரர்களாக உருவெடுத்த இவர்கள் இரண்டு பேரும் பின்னாளில் இந்திய அணியின் கேப்டன்களாகவும் இருந்தனர். இவர்கள் இருவரும் 1996ம் ஆண்டு அறிமுகமான அந்த டெஸ்ட் போட்டியில் சவ்ரவ் கங்குலி 131 ரன்களும், டிராவிட் 95 ரன்களும் விளாசி இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்கள்.
விராட் கோலி எனும் விருட்சகம்:
பின்னர், 2011ம் ஆண்டு ஜுன் 20ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானவர் விராட் கோலி. அந்த போட்டியில் விராட் கோலி 4 மற்றும் 15 ரன்கள் எடுத்தாலும், பின்னாளில் சச்சினுக்கு அடுத்தபடியாக இந்திய அணிக்காக அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
சச்சினின் கிரிக்கெட் சாதனைகள் பலவற்றையும் உடைத்து உலக கிரிக்கெட்டின் அரசன் என்றும், இந்திய அணிக்காக கேப்டனாக பல வெற்றிகளையும் பெற்றுத் தந்தவர் விராட்கோலி. விராட் கோலி கடந்த மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஜாம்பவான் பட்டியலில் தமிழர்?
இவர்கள் 3 பேரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அதே நாளில் இந்திய அணிக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சனும் அறிமுகமாகியுள்ளார். சென்னையைப் பூர்வீகமாக கொண்ட சாய் சுதர்சன் ஐபிஎல், ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிட்டியுள்ளது. மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாய் சுதர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது திறமையை வெளிக்காட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




















