Rohit Sharma Record: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோகித்சர்மா படைத்த சாதனைகள் என்னென்ன தெரியுமா..?
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் ரோகித்சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி நேற்று ஆடிய முதல் டி20 போட்டியில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித்சர்மா சில அரிய சாதனைகளை படைத்துள்ளார்.
இந்திய அணியின் மூன்று வடிவ போட்டிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித்சர்மா நேற்று நடந்த போட்டியில் 14 பந்துகளில் 24 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்களை எட்டியபோது டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக 1000 ரன்களை விளாசினார். இதன்மூலம் 30 இன்னிங்சில் கேப்டனாக1000 ரன்களை எட்டிய வீரர் என்ற விராட்கோலியின் சாதனையை ரோகித்சர்மா முறியடித்தார். ரோகித்சர்மா 29 இன்னிங்சில் 1000 ரன்களை எட்டி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை பட்டியலில், பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாம் 24 இன்னிங்சில் 1000 ரன்களை எட்டிய கேப்டன் என்று முதலிடத்தில் உள்ளார்.
இது மட்டுமின்றி, கேப்டனாக புதிய சாதனை ஒன்றையும் ரோகித்சர்மா படைத்துள்ளார். இந்திய அணிக்கு தனது தலைமையின் கீழ் தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்றுத்தந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 13 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற அரிய சாதனையையும் ரோகித்சர்மா படைத்துள்ளார்.
🚨 Milestone Alert 🚨
— BCCI (@BCCI) July 7, 2022
First captain to win 1⃣3⃣ successive T20Is - Congratulations, @ImRo45. 👏 👏#TeamIndia | #ENGvIND pic.twitter.com/izEGfIfFTn
டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்ற அணி என்ற அரிய சாதனையை படைக்கும் வாய்ப்பு இந்திய அணிக்கு கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் கிட்டியது. ஆனால், அந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அந்த தொடருக்கு ரிஷப்பண்ட் கேப்டனாக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட்கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித்சர்மா தலைமையில் இந்திய அணி நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை ஆகிய அணிகளை ஏற்கனவே டி20 தொடரில் தோற்கடித்திருந்தது. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் தனது வெற்றிப்பயணத்தை ரோகித்சர்மா தொடர்ந்துள்ளார்.
35 வயதான ரோகித்சர்மா இதுவரை 126 டி20 போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 337 ரன்களை விளாசினார். அவற்றில் 4 சதங்கள், 26 அரைசதங்கள் அடங்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்