Rohit Sharma Record: 11-வது ஆண்டை சதத்துடன் தொடங்கிய ரோகித்.. ஜெயசூர்யா, பாண்ட்டிங்கை சமன் செய்து அசத்தல்..!
IND vs NZ: இந்திய கேப்டன் ரோகித்சர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 30வது சதத்தை விளாசி அசத்தியுள்ளார்.
இந்திய கேப்டன் ரோகித்சர்மா 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் விளாசி அசத்தியுள்ளார். இது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ரோகித்சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
30வது சதம்:
ரோகித்சர்மா ஒருநாள் போட்டியில் விளாசும் 30வது சதம் இதுவாகும். ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் விளாசிய ரிக்கி பாண்டிங்கின் சாதனையை ரோகித்சர்மா சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தன்னுடைய 375வது ஒருநாள் போட்டியில்தான் 30வது சதத்தை விளாசினார். ஆனால், ரோகித்சர்மா தன்னுதைடய 241வது ஒருநாள் போட்டியிலே அவரது சாதனையை சமன் செய்துள்ளார்.
பாண்டிங், ஜெயசூர்யா சாதனை சமன்:
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் கிரிக்கெட் கடவுள் எனப்படும் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் விராட்கோலி 46 சதங்களுடன் உள்ளார். இன்றைய சதத்தின் மூலம் மூன்றாவது இடத்தில் ரோகித்சர்மா ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜெயசூர்யாவும் 30 சதங்களை ஒருநாள் போட்டியில் விளாசியுள்ளார்.
11வது ஆண்டு:
2007ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய ரோகித்சர்மா 2013ம் ஆண்டு ஜனவரி 23-ந் தேதி முதல் இந்திய அணியின் தொடக்க வீரராக ஆடி வருகிறார். ரோகித்சர்மா தொடக்க வீரராக களமிறங்கி நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இதையடுத்து, தொடக்க வீரராக 11வது ஆண்டில் அடியெடுத்து வைத்த முதல் நாளே சதத்துடன் தொடங்கியுள்ளார்.
ஃபார்முக்கு திரும்பிய ஹிட்மேன்
50வது ஓவர் உலகக்கோப்பைத் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்திய கேப்டன் ரோகித்சர்மா சதமடித்து ஃபார்முக்கு திரும்பியிருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதான ரோகித்சர்மா 45 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8 சதம், 1 இரட்டை சதம், 14 அரைசதங்கள் என 3137 ரன்களை விளாசியுள்ளார்.
241 ஒருநாள் போட்டிகளில் ஆடி 30 சதங்கள், 3 இரட்டை சதங்கள், 48 அரைசதங்கள் உள்பட 10 ஆயிரத்து 882 ரன்களை விளாசியுள்ளார். 148 டி20 போட்டிகளில் ஆடி 4 சதம், 29 அரைசதங்கள் உள்பட 3853 ரன்களை விளாசியுள்ளார். இதுதவிர மும்பை இந்தியன் கேப்டனான ரோகித் 227 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1 சதம், 40 அரைசதங்கள் உள்பட 5 ஆயிரத்து 879 ரன்களை விளாசியுள்ளார்.