(Source: ECI/ABP News/ABP Majha)
Rohit Sharma Birthday: தோல்வியால் துவண்டுவிடுவதில்லை.. வீழ்ந்தபோதெல்லாம் எழுந்த வீரன் ரோஹித்! பர்த்டே ஸ்பெஷல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3313 ரன்கள், 26 அரை சதங்கள், 4 சதங்களுடன் அதிக ரன் எடுத்த வீரராக முதல் இடத்தில் இருக்கிறார்.
இன்றைக்கு கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் பிறந்தநாள். தனது கிரிக்கெட்டிங் கரியரில் படிப்படியாக முன்னேறி இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் ரோஹித்தின் கதையில் உத்வேகமிக்க கம்-பேக்குகள் பல இருக்கின்றன. அந்த வரிசையில், இப்போது அவர் சந்தித்திருக்கும் சரிவில் இருந்தும் மீண்டு வருவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இது ஐபிஎல் சீசன். வழக்கமாக 8 அணிகள் மோதும் தொடரில் இம்முறை 10 அணிகள் மோதி வருகின்றன. ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, வரலாறு காணாத சரிவை சந்தித்து இருக்கிறது. ரோஹித் தலைமையிலான இந்த அணி, இம்முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை முதல் அணியாக இழந்திருக்கிறது. இன்னும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத மும்பை அணி, ரோஹித் பிறந்தநாளான இன்று தனது வெற்றிக்கணக்கை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது மும்பை அணி.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த பின்பு ரோஹித் சொன்னது இதைதான். “இந்த சரிவுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். ஒவ்வொரு போட்டிக்கும் நான் என்னை முழுமையாக தயார்படுத்தி கொண்டுதான் செல்கிறேன். உலகம் முடிந்துவிடவில்லை. இதற்கு முன்பும் மும்பை அணி மீண்டு எழுந்துள்ளது. இன்னொரு முறை மீண்டு எழ முயற்சி செய்து வருகிறோம்” என தெரிவித்திருந்தார்.
ஐபிஎல் கவலைகள் ஒரு புறம் இருந்தாலும், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திச் செல்ல இருப்பது ரோஹித்தான். ரோஹித்தின் தற்போதைய ஃபார்ம் தொடர்ந்தால், உலகக்கோப்பை கனவு தகர்ந்திடுமே என்ற பயமும் இந்திய ரசிகர்களுக்கு எழத் தொடங்கிவிட்டது.
ஆனால், ஐபிஎல் பற்றிய கவலையை தொடர்ந்து ரோஹித்திற்கு டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கவலையும் சேர்ந்து இருக்கும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3313 ரன்கள், 26 அரை சதங்கள், 4 சதங்களுடன் அதிக ரன் எடுத்த வீரராக முதல் இடத்தில் இருக்கிறார். இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் பேட்டிங்கிலும், கேப்டன்சியிலும் ரோஹித் சிறப்பாக விளையாட வேண்டும். இந்த கவலையை தகர்க்கவே, மும்பை அணி ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் கம்-பேக் தர வேண்டும்.
ஏனென்றால், ரோஹித்தின் கேப்டன்சி சொதப்பலே இப்போது கிரிக்கெட் வட்டாரத்தின் பேச்சாக இருக்கிறது. அணியைப் பொறுத்தவரை, சொதப்பலான ஒரு அணியாகவே இருந்தாலும் அந்த அணியை வெற்றிக்கு வழிநடத்திச் சென்றிருக்கிறார் ரோஹித். அப்படியான ஒரு ரோஹித்தை எதிர்ப்பார்த்து இருக்கின்றனர் இந்திய ரசிகர்கள். இது ரோஹித்திற்கும் தெரிந்திருக்கும். ஆனால், ”காயப்பட்ட சிங்கத்தின் மூச்சுக்காற்று கர்ஜனையைவிட பயங்கரமா இருக்கும்” என்ற வசனம் ரோஹித்திற்கு நன்றாகவே பொருந்தும். வெற்றிகளை பெற்றிருக்கும் ரோஹித் நிறைய தோல்விகளையும் சந்தித்திருக்கிறார். அதனால், இந்த ஐபிஎல் சரிவு ரோஹித்தின் கம்-பேக் வியூகத்திற்கு ஒரு பாடமாக இருக்கும் என நம்புவோமாக. பொறுத்திருந்து பார்ப்போம். பர்த்டே வாழ்த்துகள் கேப்டன்.