IND vs AFG: ரோஹித் சர்மா டி20 சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை.. முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாறு படைப்பு!
150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி, 150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை தவிர வேறு எந்தவொரு கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை படைத்தது கிடையாது.
ரோஹித் சர்மா அறிமுகம்:
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கடந்த 2007-ம் ஆண்டு டி20 சர்வதேச போட்டியில் அறிமுகமானார். கடந்த 2007 ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம் பெற்றிருந்தார். இதுவரை, ரோஹித் சர்மா 149 டி20 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 139.15 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 30.58 சராசரியுடன் 3853 ரன்கள் எடுத்துள்ளார். இதில், ரோஹித் சர்மா 4 சதங்களும், 29 அரை சதங்களும் அடித்துள்ளார்.
அதிக டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த வீரர்கள்:
இந்த பட்டியலில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் இரண்டாவது இடத்தில் உள்ளார். பால் ஸ்டிர்லிங் 134 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதையடுத்து, மற்றொரு அயர்லாந்து வீரரான ஜார்ஜ் டோக்ரெல் 128 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி மூன்றாவது இடத்தில் உள்ளார். தொடர்ந்து, பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் சோயப் மாலிக் 124 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4வது இடத்தில் உள்ளார்.
வீரர்கள் | ஆண்டு இடைவெளி | நாடு | போட்டிகள் | ரன்கள் | அதிகபட்ச ஸ்கோர் | 100 |
ரோஹித் சர்மா | 2007-2024 | இந்தியா | 150 | 3853 | 118 | 4 |
பால் ஸ்டிர்லிங் | 2009-2023 | அயர்லாந்து | 134 | 3438 | 115* | 1 |
டோக்ரெல் | 2010-2023 | அயர்லாந்து | 128 | 969 | 58* | - |
சோயிப் மாலிக் | 2006-2021 | பாகிஸ்தான் | 124 | 2435 | 75 | - |
மார்ட்டின் கப்டில் | 2009-2022 | நியூசிலாந்து | 122 | 3531 | 105 | 2 |
நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் 122 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 5வது இடத்தில் உள்ளனர். இது தவிர, வங்கதேசத்தின் மஹ்முதுல்லா ரியாஸ், பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், நியூசிலாந்தின் டிம் சவுதி, வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் போன்ற பெயர்களும் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் இடம்பெற்றுள்ளன. அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 10வது இடத்தில் உள்ளார். இவர இதுவரை 116 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். விராட் கோலி கடந்த 2010 ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இருப்பினும், இவர்தான் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.