Rinku Singh: "எதிர்பார்க்கவே இல்லை" பந்துவீசியது குறித்து மனம் திறந்த ரிங்குசிங்!
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் தன்னை பந்துவீச அழைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்று ரிங்குசிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.
டி20 தொடரை வென்ற இந்தியா:
இந்தியா – இலங்கை மோதிய 3வது டி20 போட்டித் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. குறிப்பாக, 138 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு 2 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
அப்போது, யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆட்டத்தின் 19வது ஓவரை ரிங்குசிங் வீசினார். டி20 கிரிக்கெட்டில் முதன்முறையாக பந்துவீசிய அவர் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
எதிர்பார்க்கவே இல்லை:
இதுதொடர்பாக, ரிங்குசிங் கூறியதாவது, “ நான் உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். ஒருநாள் போட்டிகளில் கூட விக்கெட் வீழ்த்தியுள்ளேன். சூர்யகுமார் யாதவ் என்னிடம் இந்த தொடரில் பந்துவீச தயாராக இருக்குமாறு கூறினார். பந்துவீச பயிற்சி எடுத்துக்கொள்ளுமாறும் கூறியிருந்தார். ஆனால், இந்த ஆட்டத்தில் நெருக்கடியான சூழலில் என்னிடம் பந்துவீசுமாறு கூறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது கைகளை சுற்றிக்கொள்ளுமாறும் கூறியிருந்தார். நான் பந்துவீசும்போது 2 விக்கெட் வீழ்த்தியது கடவுளின் திட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி பெற்ற பரிசோதனை முயற்சி:
19வது ஓவரை ரிங்குசிங் சிறப்பாக வீசி முடிக்க 20வது ஓவரை யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவ் வீசினார். அந்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் வெறும் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஆட்டத்தை டை-யில் முடிக்க வைத்தார். இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கைக்கு சவால் அளித்தார்.
ரிங்குசிங்கும், சூர்யகுமார் யாதவும் பந்துவீச வரும்போது கலீல் அகமதுவிற்கும், முகமது சிராஜிற்கும் தலா 1 ஓவர்கள் நிலுவையில் இருந்தது. ஆனாலும், பரிசோதனை முயற்சியாக ரிங்குசிங் மற்றும் சூர்யகுமார் யாதவ் பந்துவீசி ஆட்டத்தை வெற்றியில் முடித்துக் கொடுத்தனர். சூப்பர் ஓவரில் இலங்கை 2 ரன் மட்டுமே எடுக்க இந்தியா முதல் பந்திலே 4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் புதிய ஃபினிஷிங் பவுலர்களாக ரிங்குசிங் மற்றும் சூர்யகுமார் யாதவ் மாறி அசத்தியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.