Ashwin Retirement: “ஓய்வைப்பற்றி சிந்தித்த நிமிஷம்; சாய்வதற்கு தோள் தேவைப்பட்டது; மனைவி மட்டுமே உறுதுணை” - அஷ்வின்
நான் பல காரணங்களுக்காக ஓய்வு பெற நினைத்தேன் எனவும் சாய்வதற்கு ஒரு தோள் தேவைப்பட்டது எனவும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நான் பல காரணங்களுக்காக ஓய்வு பெற நினைத்தேன் எனவும் சாய்வதற்கு ஒரு தோள் தேவைப்பட்டது எனவும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தவிர்க்க முடியாத இடத்தை தக்க வைத்திருப்பவர் ரவிச்சந்திரன் அஷ்வின். 2017-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் அஷ்வின் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்த நேரத்தில், அடிக்கடி காயம் ஏற்பட்டதால் அவரது கிரிக்கெட் கரியரில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிட்டது.
35 வயதான ஆல்-ரவுண்டர் அஷ்வின், கடந்த 2018 – 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலேயே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி சிந்தித்தாக தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசி இருக்கும் அவர், “2018-2020 காலக்கட்டங்களில் நிறைய முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற நினைத்திருக்கிறேன். காயம் ஏற்பட்டதனால் மட்டும் இந்த முடிவை எடுக்க வேண்டுமென்று நினைக்கவில்லை. எனக்கு காயம் ஏற்பட்டபோது யாரும் என்னை ஆதரிக்கவில்லை. என்னுடைய கிரிக்கெட் கரியரின் முக்கியமான அந்த தருணத்தில் நான் அணியில் இருக்க வேண்டுமென யாரும் நினைக்கவில்லை. மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆதரவு எனக்கு கிடைக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு இப்போதும் உண்டு. இந்திய அணிக்காக பல முக்கிய போட்டிகளில் வெற்றியை பெற்று தந்திருக்கிறேன். ஆனால், என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என தோன்றுகிறது.
யாராவது என்னை ஆதரிக்க வேண்டும், யாராவது எனக்கு அனுதாபம் கொடுக்க வேண்டும் என்று நான் பொதுவாக உதவியை தேடுவதில்லை. நான் சிறந்தவனாக இருக்க முடியாது என்று உணர்ந்தேன். மேலும் சாய்வதற்கு ஒரு தோள் தேவை என்று உணர்ந்தேன்.
அப்போது, கிரிக்கெட்டை விட்டு வேறு பாதையில் பயணிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இருப்பினும் நான் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யலாம் என்று காயங்களில் இருந்து மீண்டு வந்து மீண்டும் முயற்சி செய்து இந்திய டி20 அணியில் இடம் பிடித்தேன். எனக்கு இந்த காலங்களில் உறுதுணையாக இருந்தது என்னுடயை மனைவி மட்டும்தான். என் முடிவு குறித்து என் தந்தையிடம் கூறினேன். ஆனால் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். நீ மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவாய் என்றார். மீண்டும் ஒயிட் பால் கிரிக்கெட்டில் ரீ-என்ட்ரி கொடுப்பாய். நான் இறப்பதற்குள் அதை பார்ப்பேன் என்றார். என் தந்தை கூறியது அப்போது எனக்கு உத்வேகம் அளித்தது. தற்போது கிரிக்கெட் விளையாடும் எண்ணத்தில் தான் இருக்கிறேன். அதற்காக ஒவ்வொரு தொடருக்கும் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன். இப்போது மீண்டு வந்திருக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அஷ்வின் தற்போது செஞ்சூரியனில் இந்திய டெஸ்ட் அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.