Ashwin: புதிய வரலாறு படைத்த அஸ்வின்! இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகள்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் புதிய வரலாறு படைத்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளும் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை தற்போது சமன் செய்துள்ளது.
அஸ்வின் புதிய சாதனை:
இந்த போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், சுப்மன்கில் எந்தளவு பங்களிப்பு அளித்தனரோ, அதே அளவு பந்துவீச்சில் பும்ரா, குல்தீப்யாதவ், அஸ்வின் பங்களித்துள்ளனர். இந்த டெஸ்ட போட்டியில் முதல் இன்னிங்சில் எந்த விக்கெட்டும் கைப்பற்றாத அஸ்வின், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் அஸ்வின் புதிய வரலாறு படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் அஸ்வின் கைப்பற்றும் 96வது விக்கெட் இதுவாகும். இதற்கு முன்பு, இந்த சாதனையை ஜாம்பவான் இடது கை சுழற்பந்துவீச்சாளரான பகவத் சந்திரசேகர் தன்வசம் வைத்திருந்தார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 95 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் ஒல்லி போப்பை அவுட்டாக்கியதன் மூலம் அஸ்வின் இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.
அடுத்த டெஸ்டில் 500?
அஸ்வினுக்கும், சந்திரசேகருக்கும் அடுத்த இடத்தில் அனில் கும்ப்ளே 92 விக்கெட்டுகளுடனும், பிஷன்சிங் பேடி/ கபில்தேவ் 85 விக்கெட்டுகளுடனும், இஷாந்த் சர்மா 67 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 499 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இன்னும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் அஸ்வின் டெஸ்டில் தன்னுடைய 500வது விக்கெட்டை கைப்பற்றுவார்.
37 வயதான அஸ்வின் இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 499 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 59 விக்கெட்டுகளை கைப்பற்றி 7 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஒரு போட்டியில் 140 ரன்களை விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரான அஸ்வின் 5 சதங்கள், 14 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 222 ரன்களை கைப்பற்றியுள்ளார்.
புதிய வரலாறு:
இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 500 விக்கெட் என்ற மைல் கல்லை அடைவதுடன், டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 100 விக்கெட்டை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Ind vs Eng 2nd Test: இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா; இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மேலும் படிக்க: Rachin Ravindra: டெஸ்ட் வாழ்க்கையில் முதல் இரட்டை சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த ரச்சின் ரவீந்திரா..!