Rachin Ravindra: டெஸ்ட் வாழ்க்கையில் முதல் இரட்டை சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த ரச்சின் ரவீந்திரா..!
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மவுண்ட் மனுகானை ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா தனது சிறப்பான பேட்டிங் மூலம் இரட்டை சதம் அடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். மேலும், சிறப்பான சாதனையையும் படைத்துள்ளார்.
ரச்சின் ரவீந்திரா கடந்த சில மாதங்களில் நியூசிலாந்துக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில், அவர் 10 போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 578 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டிக்கு முன்னர் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஸ்கோர் முறையே 16, 4, 18, 4, 18* மற்றும் 13 என மொத்தம் 73 ரன்கள் மட்டுமே எடுத்த ரச்சின், நான்காவது போட்டியில் இரட்டை சதம் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
4வது நியூசிலாந்து வீரர்:
ரச்சின் ரவீந்திரா தனது நான்காவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து பல பெரிய சாதனைகளை முறியடித்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரச்சின் ரவீந்திரா 366 பந்துகளை எதிர்கொண்டு (26 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) 240 ரன்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா டெஸ்டில் 100 ரன்களை கடந்தது இதுவே முதல் முறையாகும். மேலும், அதை இரட்டை சதமாக மாற்றியும் அசத்தினார். இதன் மூலம், தனது முதல் டெஸ்ய் சதத்தை இரட்டை சதமாக மாற்றிய நான்காவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை ரச்சின் ரவீந்திரா பெற்றார். இதற்கு முன் 3 நியூசிலாந்து வீரர்களால் மட்டும் இந்த சாதனையை செய்ய முடிந்தது. அதன்படி, சின்க்ளேர், மார்ட்டின் டோனெல்லி, டெவோன் கான்வே ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தது.
Rachin Ravindra's maiden Double Hundred moment in Test cricket.
— Johns. (@CricCrazyJohns) February 5, 2024
- The future star of world cricket. 🫡pic.twitter.com/r2xzmNdBbE
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 23-25 சுழற்சியில் அதிகப்பட்ச தனிநபர் ஸ்கோர்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் அதிகப்பட்ச தனிநபர் ஸ்கோரை அடித்த வீரர் என்ற சாதனையை ரச்சின் ரவீந்திரா தற்போது படைத்துள்ளார். ரச்சின் ரவீந்திரா 240 ரன்கள் குவித்து யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சாதனையை முறியடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்தார். இது 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அதிகபட்ச இன்னிங்ஸாக இருந்தது. தற்போது 240 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வாலின் சாதனையை முறியடித்தார் ரச்சின் ரவீந்திரா.
ரச்சின் ரவீந்திரா தனது முதல் தர வாழ்க்கையில், ரவீந்திரன் இதுவரை 47 போட்டிகளில் 81 இன்னிங்ஸ்களில் 2,850 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
கோலியை கடந்த வில்லியம்சன்:
ரச்சினின் அற்புதமான பேட்டிங்கால், நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் 144 ஓவர்களில் 511 ரன்களை குவித்தது. கேன் வில்லியம்சன் 289 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். இந்த நேரத்தில், அவரது பேட்டில் இருந்து 16 பவுண்டரிகள் வந்தன. கேன் வில்லியம்சனின் டெஸ்ட் வாழ்க்கையில் இது 30வது சதமாகும். இதன் மூலம், டெஸ்டில் அதிக சதம் அடித்த விராட் கோலியை முந்தினார். விராட் இதுவரை டெஸ்டில் 29 சதங்கள் அடித்துள்ளார்.