Babar Azam in T20: விராட்கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்..! அப்படி என்ன சாதனை..?
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டி20 கிரிக்கெட் தரவரிசையில் விராட்கோலியின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பு வகிப்பவர் பாபர் அசாம். தன்னுடைய திறமையான பேட்டிங்கால் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக உயர்ந்த பாபர் அசாம் உலகளவில் சிறந்த பேட்ஸ்மேனாகவும் வலம் வருகிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியுடன் ஒப்பிடப்பட்ட பாபர் அசாம் தற்போது விராட்கோலியின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
ஐ.சி.சி. சமீபத்தில் சர்வதேச பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் டி20 போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர்அசாம் உள்ளார். அதாவது, நேற்றைய நிலவரப்படி அவர் தொடர்ந்து 1030 நாட்களாக டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். முன்னதாக, இந்திய முன்னாள் கேப்டன் விராட்கோலி தொடர்ந்து 1013 நாட்கள் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார். தற்போது, விராட்கோலியின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
இந்த சாதனை குறித்து பாபர் அசாம் கூறியிருப்பதாவது, “ஒரு வீரராக அனைத்து வடிவ போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது அனைவரின் கனவாக இருக்கும். நீங்கள் ஏதேனும் ஓரிரு வடிவங்களில் தலைசிறந்த வீரராக இருந்தால் எளிதாக இதைச் செய்யலாம். ஆனால், மூன்று வடிவ போட்டிகளிலும் நம்பர் 1 வீரராக இருந்தால் ஆரோக்கியமாக இருப்பதற்கம், உடல் தகுதிக்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெள்ளைப் பந்தில் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன். டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
28 வயதான பாபர் அசாம் இதுவரை 74 டி20 போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 686 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 1 சதம், 26 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 122 ரன்களை விளாசியுள்ளார். மேலும், 89 ஒருநாள் போட்டிகளில் 4 ஆயிரத்து 442 ரன்களையும், 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 851 ரன்களையும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 6 சதங்களையும், 21 அரைசதங்களையும், ஒருநாள் போட்டிகளில் 17 சதங்களையும், 19 அரைசதங்களையும் விளாசியுள்ளார். பாபர் அசாம் ஒருநாள் போட்டியிலும் 892 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். விராட்கோலி 811 புள்ளிகளுடன் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் பாபர்அசாம் 815 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார்.
விராட்கோலியின் சாதனையை முறியடித்துள்ள பாபர் அசாமிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாபர் அசாம் கேப்டன்சியால் பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்