Pawan Kalyan: “தமிழக அரசியல்வாதிகள் பாசாங்குத்தனமானவர்கள்“.. விளாசிய பவன் கல்யாண்.. எதற்கு தெரியுமா.?
Pawan Kalyan: தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் 12-ம் ஆண்டு விழாவில் பேசிய பவன் கல்யாண், தமிழக அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆந்திராவில், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி உருவானதன் 12-ம் ஆண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதலமைச்சரான பவன் கல்யாண், மொழிக் கொள்கை விஷயத்தில், தமிழக அரசியல்வாதிகள் பாசாங்குத்தனமாக உள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
மும்மொழி; மத்திய-தமிழ்நாடு அரசுகளிடையே நிலவும் பிரச்னை
மும்மொழிக் கொள்கை விஷயத்தில், மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளிடையே பிரச்னை நிலவி வருகிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழ்நாடு அரசு, இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டில், பாஜக தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவே உள்ளன. இந்நிலையில், இந்தியை திணிப்பதாகக் கூறி, புதிய கல்விக் கொள்ளையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது. இதனால், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. புதிய கல்விக்கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என மத்திய அரசு கூறி வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் மொழிப்போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது மொழியாக இந்தியை மட்டுமே படிக்க வேண்டும் என புதிய கல்விக் கொள்கை கூறவில்லை என்றும், ஏதாவது ஒரு இந்திய மொழியை, அவரவர் விருப்பத்திற்கேற்ப படிக்கலாம் என்றே கூறுவதாகவும் மத்திய அரசு விளக்கமளித்தது. ஆனாலும், தமிழ்நாடு அரசு அதை ஏற்காமல், எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை சாடிய பவன் கல்யாண்
இப்படிப்பட்ட சூழலில், தனது கட்சியின் 12-ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய பவன் கல்யாண், இந்தியாவிற்கு, இருமொழிகள் மட்டுமல்ல, தமிழ் உட்பட பல மொழிகள் தேவை என கூறினார். மொழியியல் பன்முகத்தன்மையை நாம் ஏற்க வேண்டும் என்று கூறிய அவர், அது நாட்டின் ஒருமைப்பாட்டை மட்டுமல்லாமல், அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்க உதவும் என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசியல்வாதிகளை விமர்சித்த அவர், நம் நாட்டில் பல மொழிகள் இருப்பது நல்லது, ஆனால், தமிழக அரசியல்வாதிகள் இந்தியை ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை என கூறினார். மேலும், தமிழக அரசியல்வாதிகள் பாசாங்குத்தனமானவர்கள் என கடுமையாக விமர்சித்த பவன் கல்யாண், இந்தியை எதிர்க்கும் அவர்கள், வணிக லாபத்திற்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட மட்டும் அனுமதிக்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.
பாலிவுட்டில் இருந்து வரும் பணத்தை விரும்பும் அவர்கள், ஏன் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதேபோல், சிலர் ஏன் சமஸ்கிருதத்தை விமர்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை, இது எந்த மாதிரியான லாஜிக் என்றும் விமர்சித்தார்.
மும்மொழிக் கொள்கையை தமிழகம் எதிர்த்துவரும் நிலையில், பவன் கல்யாணின் இந்த விமர்சனம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

