PAK vs BAN Innings Highlights: கேப்பில் விழுந்த விக்கெட்டுகள், தடுமாறிய வங்கதேசம்- பாகிஸ்தானுக்கு 205 ரன்கள் இலக்கு
PAK vs BAN Innings Highlights: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
PAK vs BAN Innings Highlights: உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி 204 ரன்களை சேர்த்தது.
வங்கதேச அணி பேட்டிங்:
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முறையே 7 மற்றும் 9வது இடங்களில் உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றனர். இதில் பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை கண்ட நிலையில், வங்கதேச அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியை கண்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆரம்பமே அதிர்ச்சி:
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான தன்ஜித் ஹசின் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே டக்-அவுட் ஆனார். அவரை தொடர்ந்து வந்த ஷாண்டோ 4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்களிலும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால், 23 ரன்களை சேர்ப்பதற்கு 3 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி திணறியது.
மீட்டெடுத்த லிட்டன் தாஸ் - மஹ்மதுல்லா:
இதையடுத்து 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - மஹ்மதுல்லா கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை சரிவில் இருந்து மீட்டது. சீரான இடைவெளியில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினர். இந்த கூட்டணி 79 ரன்களை சேர்க்க, வங்கதேச அணி 100 ரன்களை கடந்தது. 45 ரன்கள் சேர்த்து இருந்தபோது இஃப்திகார் அஹ்மது பந்துவீச்சில் லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார்.
மஹ்மதுல்லா அரைசதம்:
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மஹ்மதுல்லா அரைசதம் கடந்தார். 70 பந்துகளில் 56 ரன்களை சேர்த்த அவர், ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ஹிரிதாய் வெறும் 7 ரன்களில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். அதேநேரம், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் குறந்தது அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 43 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஹரிஸ் ராஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்:
இதையடுத்து மெஹிதி ஹாசன் 25 ரன்களிலும், டஸ்கின் அஹ்மத் 6 ரன்களிலும், முஸ்தபிசுர் ரஹ்மான் 3 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், 45.1 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாஹின் அஃப்ரிடி மற்றும் வாசிம் ஜுனியர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இஃப்திகார் அஹ்மத் மற்றும் உசாமா மிர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.