T20 World cup: பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்வீர்களா...? இந்திய கேப்டன் ரோகித்சர்மா சொல்வது என்ன..?
டி20 உலகக் கோப்பை தொடரில் மட்டுமே எங்களின் கவனம் இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் மட்டுமே எங்களின் கவனம் இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நாளை இந்தியாவும்-பாகிஸ்தானும் மோதவுள்ளன. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆட்டம் மெல்போர்னில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் தலைமையிலான அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித் சர்மா கூறியதாவது, "பந்துவீச்சாளர் முகமது ஷமியின் உடல் தகுதியை நாங்கள் பார்க்க விரும்பினோம். அவர் காயத்தில் இருந்து குணமடைய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். வார்ம் அப் ஆட்டத்தில் அவருக்கு முழு நான்கு ஓவர்கள் கொடுக்க விரும்பினோம், ஆனால் அது சரியாக நடக்கவில்லை. ஆனால் அவர் தயாராக இருந்தார். அதை இப்போது செயல்படுத்துவது மட்டும்தான் எனது வேலை. ஷமி செய்வதை நான் செய்கிறேன்.
கடைசியாக விளையாடிய போட்டிக்குப் பிறகு பி.சி.சி.ஐ. மற்றும் அணி நிர்வாகம் எடுத்த முடிவின்படி ஆஸ்திரேலியாவுக்கு வந்தோம். உலகக் கோப்பை எங்கு நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். எனவே நாங்கள் இங்கு முன்கூட்டியே வந்து இங்குள்ள நிலைமைகளுக்குப் பழக விரும்பினோம். அணியில் இடம்பெற்றுள்ள நிறைய வீரர்கள் இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் விளையாடியதில்லை. இதுபோன்ற காரணங்களால் நாங்கள் முன்கூட்டியே வந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தோம்.
ஆஸ்திரேலியாவில் சமீப காலமாக அதிக எண்ணிக்கையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. இங்குள்ள மைதானங்கள் குறித்து சில தகவல்கள் எங்களுக்குத் தேவைப்பட்டது. எந்த மாதிரியான வீரர்கள் ஆஸ்திரேலிய மைதானத்திற்கு தேவைப்படுவார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.
டாஸ் முடிவு என்பதும் மிகவும் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். மழை காரணமாக ஆட்டத்தின் ஓவர் பாதியாக குறைக்கப்பட்டாலும் அதற்கு ஏற்ப டாஸ் முடிவு செய்ய வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் 8 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால், அணியில் இடம்பெற்றுள்ள பல வீரர்களுக்கு குறைந்த வடிவிலான ஓவர்களில் விளையாடிய அனுபவம் இருக்கிறது என்றார் ரோஹித் சர்மா.
2023 ஆசிய கோப்பைத் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் மேற்கொள்ளாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். இந்நிலையில், இதுதொடர்பாக ரோஹித் சர்மா கூறுகையில், "இப்போதைய எனது கவனம் உலகக் கோப்பைத் தொடரில்தான் இருக்கிறது. ஏனெனில் இதுதான் எங்களுக்கு இப்போது முக்கியமானதாகும். பாகிஸ்தான் சுற்றுப்பயணம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு எடுக்கும்" என்றார் ரோஹித் சர்மா.