Champions Trophy 2013: ஹர்பஜனால் முடியாது..! அஸ்வினால் முடியும்..! சாம்பியன்ஸ் டிராபியை வென்ற தோனியின் படை
தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் சாம்பியன்ஸ் டிராபி தொடரும் ஒன்று. கடந்த 1998ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில், இந்தியா ஒருமுறை மட்டுமே கோப்பையை கைப்பற்றி இருந்தது. அதுவும், இலங்கை உடன் பகிர்ந்து கோப்பையை கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் தான் 2007ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை, 2011ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, 2013ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது. மூத்த வீரர்கள் யாரும் இல்லாமல், தோனி தலைமையிலான இளம் அணி இந்த தொடரில் களமிறங்கியது.
அசத்திய இந்திய அணி:
”பி” பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, லீக் தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பெற்றது. தொடர்ந்து, அரையிறுதிப்போட்டியில், இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி களம் கண்டது. அதில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பரபரப்பான இறுதிப்போட்டி:
50 ஓவர்கள் தொடராக நடைபெற்று வந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. ஆனால், 2013ம் ஆண்டு ஜுன் 23ம் தேதி அன்று இறுதிப்போட்டி நடைபெற்ற பர்மிங்ஹாம் மைதானத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா:
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக கோலி 43 ரன்களையும், ஜடேஜா 33 ரன்களையும் மற்றும் தவான் 31 ரன்களையும் குவித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே சேர்த்தது.
தோனி செய்த மேஜிக்:
இந்த இலக்கை வைத்துக்கொண்டு இறுதிப்போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்வது சாத்தியமே இல்லை என ரசிகர்கள் முடிவே செய்துவிட்டனர். ஆனால், dhoni have other ideas எனும் வசனம் தான் போட்டி முடிவில் அனைவரது நினைவிலும் தோன்றியது. புவனேஷ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் போன்ற பந்துவீச்சாளர்களை சிறப்பாக கையாண்டு எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால், 46 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது.
அச்சுறுத்திய மார்கன் - பொபாரா கூட்டணி:
இருப்பினும் 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மார்கன் மற்றும் பொபாரா கூட்டணி பொறுப்பாக விளையாடி ரன் சேர்த்தது. 64 ரன்களை சேர்த்த இந்த கூட்டணி, இந்தியாவின் கோப்பை வெல்லும் கனவை கலைப்பது உறுதியாகிவிட்டது எனவே பலரும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
”நாயகன்” இஷாந்த ஷர்மா
கடைசி 18 பந்துகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 28 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பரபரப்பான சூழலில், அந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் சர்மாவிடம் பந்தை வழங்கினார் தோனி. ஆனால், 18வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலேயே 8 ரன்களை வாரிக்கொடுத்து அதிர்ச்சி அளித்தார் இஷாந்த் சர்மா. அவ்வளவு தான் போட்டி முடிந்தது என நினைத்து முடிப்பதற்குள், அடுத்த இரண்டு பந்துகளிலேயே மார்கன் மற்றும் பொபாராவை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து இன்ப அதிர்ச்சி தந்தார்.
தோனி மாஸ்டர் மைண்ட்:
தொடர்ந்து 19வது ஓவரை வீசிய ஜடேஜா வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க, அந்த ஓவரில் ஒரு ரன் அவுட் உட்பட 2 விக்கெட்டுகள் சரிந்தன. இதையடுத்து கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. 2007ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை ஹர்பஜன் சிங்கிற்கு வழங்க விரும்பாத தோனி, இந்த முறை கடைசி ஓவரை இளம் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை நம்பி வழங்கினார்.
செய்து முடித்த அஸ்வின்:
தோனியின் நம்பிக்கையை சற்றும் வீணடிக்காத அஸ்வின் நேர்த்தியான பந்துவீச்சால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார். முதல் பந்தை டாட் செய்ய, இரண்டாவது பந்தில் பிராட் பவுண்டரி விளாசினார். அடுத்த பந்தில் ஒரு ரன்னும், அதற்கடுத்த 2 பந்துகளில் தலா 2 ரன்களையும் விட்டுக்கொடுத்தார். இதனால், கடைசி பந்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 6 ரன்கள் தேவைப்பட்டது. மைதானங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் போட்டியை காணும் ரசிகர்களின் இதயதுடிப்பு வெளியே கேட்க, என்ன நடக்கப்போகிறது என கண் இமை அசையாமல் பேட்ஸ்மேனையே உற்றுநோக்கி கொண்டிருந்தனர். ஆனால், அட்டகாசமான ஆஃப்-டர்ன் மூலமாக பேட்ஸ்மேனை ஏமாற்றி, இந்திய அணிக்கான வெற்றியை தேடி தந்தார் அஸ்வின். இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி கோப்பையை வென்றதை, இந்தியா வீரர்களும், ரசிகர்களும் கொண்டாடி தீர்த்த அந்த மகிழ்ச்சியை கண்டுகளித்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனால், அதன் பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்வது என்பது இன்றளவும் கனவாகவே தொடர்கிறது.