வரலாற்றில் இன்று 2009: இந்தியா 414... இலங்கை 411.. ஒரு நாள் தொடரில் ஓயாத ரன் மழை கொட்டித்தீர்த்த நாள்!
On This Day 2009: இந்தியா இலங்கையை 411 க்கு கட்டுப்படுத்தி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
2009 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி இந்த நாளில் ராஜ்கோட் மாதவ்ராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானத்தில இந்தியா அணி இலங்கையை எதிர்கொண்டது. இந்த ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் 400 ரன்களுக்கு மேல் எடுத்து வெற்றி முனையில் தத்தளித்தது. இந்த போட்டியில் இந்தியா வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன் அடிப்படையில் தொடக்க வீரர்களாக உலகின் மிகவும் ஆபத்தான தொடக்க வீரர் சேவாக் மற்றும் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியை வெளிப்படுத்திய இந்த ஜோடி 20 வது ஓவரில் முதல் விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது. அரைசதம் கடந்த சச்சின் டெண்டுல்கர், பெர்னாண்டோ வீசிய பந்தில் 69 ரன்களில் கிளீன் போல்டானார்.
மறுமுனையில் பௌண்டரி மற்றும் சிக்ஸர் மழையை அதிரடியாக சேவாக் பொழிய, இவருக்கு உறுதுணையாக இந்திய அணியின் அப்போதைய கேப்டன் எம்.எஸ்.தோனி ஒன் டவுனில் களமிறங்கினார். இரு வீரர்களும் இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட இந்திய அணி ரன் வேகம் மின்னல் வேகத்தில் பறந்தது. தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் கடந்த சேவாக், 150 ரன்கள் கடப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், வெலிகேதாரா வீசிய பந்தில் தில்சனிடம் கேட்ச் கொடுத்து 102 பந்துகளில் 146 ரன்களுடன் நடையைக்கட்டினார். 2 ம் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 36 ஓவர்களில் 309 ரன்கள் குவித்தது.
அதனைத்தொடர்ந்து 311 ரன்கள் இருக்கும்போதும் தோனியும் 72 ரன்களில் அவுட் ஆக, பின் வரிசை வீரர்களான ரெய்னா, கம்பீர், ஹர்பஜன், ஜடேஜா, விராட் கோலி ஓரளவு ரன்கள் குவிக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 414 ரன்கள் குவித்தது.
415 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் உபுல் தரங்காவும் தில்சனும் ஆரம்ப விக்கெட்டுக்கு 24 ஓவர்களில் 188 ஓட்டங்களை குவித்தனர். தொடக்க ஆட்டக்காரர் திலகரத்ன தில்ஷன் 124 பந்துகளில் 160 ரன்களை விளாசினார்.
அதன்பின் தொடர்ந்து வந்த குமார் சங்கக்காரா 43 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்பஜன் சிங் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார் மற்றும் மூன்று ரன் அவுட்கள் இலங்கை அணிக்கு விழுக, இந்தியா இலங்கையை 411 க்கு கட்டுப்படுத்தி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 102 பந்துகளில் 146 ரன்கள் குவித்த சேவாக் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்