On This Day in Cricket: வரலாற்றில் இன்று..! முதல் சதத்தை விளாசிய கங்குலி..! முதல் பந்தை எதிர்கொண்ட ராகுல் டிராவிட்..!
கிரிக்கெட் ஜாம்பவான்களான சவ்ரவ் கங்குலிக்கும், ராகுல் டிராவிட்டிற்கும் அவர்களது கேரியரில் ஜூன் 22-ஆம் தேதி மறக்க முடியாத நாள் ஆகும்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றின் தவிர்க்க முடியாத ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐ. தலைவர் சவ்ரவ் கங்குலியும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல்டிராவிட்டும் ஆவார்கள். இருவரும் இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடிய காலம் பொற்காலம் ஆகும். இந்திய அணி இன்று நம்பர் 1 அணியாக திகழ்வதற்கு இவர்கள் இருவரும் ஆற்றிய பங்கு என்ன என்பதற்கு இவர்கள் குவித்த ரன்களே சாட்சியாகும்.
இந்த இரு ஜாம்பவான்களுக்கும் ஜூன் 22ம் தேதி என்பது மறக்க முடியாத தருணம் ஆகும். 1996ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக உலகப்புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் மாதம் 20-ந் தேதி இந்திய அணி டெஸ்ட் போட்டியில் ஆடியது. இந்த போட்டியில்தான் இந்திய அணிக்காக சவ்ரவ் கங்குலியும், ராகுல் டிராவிட்டும் அறிமுகமாகினர். இவர்கள் இருவரும் அறிமுகமாகியபோது இந்திய அணியின் முகத்தையே இவர்கள் மாற்றப்போகிறார்கள் என்று நிச்சயம் இந்திய ரசிகர்கள் யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 344 ரன்களை குவித்த நிலையில், இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக களமிறங்கிய விக்ரம் ரத்தோர் 15 ரன்னிலும், நயன்மோங்கியா 24 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில் ஒன் டவுன் வீரராக தனது முதல் டெஸ்ட் போட்டியிலே லார்ட்ஸ் மைதானத்தில் களமிறங்கினார் கங்குலி. மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 31 ரன்களில் ஆட்டமிழக்க தனி ஆளாக போராடிய கங்குலிக்கு, அதே போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ராகுல் டிராவிட் அற்புதமான ஒத்துழைப்பு அளித்தார்.
அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவ்ரவ் கங்குலி 1996ம் ஆண்டு இதே நாளில் தனது முதல் சதத்தை விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த ராகுல் டிராவிட் 1996ம் ஆண்டு இதேநாளில்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் பந்தை எதிர்கொண்டார். இந்திய அணி குறைந்த ரன்னில் முதல் இன்னிங்சில் சுருண்டுவிடும் எதிர்பார்த்த இங்கிலாந்துக்கு, கங்குலி – டிராவிட் கூட்டணி சிம்ம சொப்பனமாக திகழ்ந்து முதல் இன்னிங்சில் இந்தியா 429 ரன்களை குவிக்க உதவியது.
இந்த போட்டியில் கங்குலி 301 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டரியுடன் 131 ரன்களை விளாசினார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் டிராவிட் 267 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரியுடன் 95 ரன்கள் விளாசினார். மேலும், அந்த போட்டியில் பந்துவீச்சாளராகவும் கங்குலி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
சவ்ரவ் கங்குலி 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7 ஆயிரத்து 212 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 16 சதங்களும், 35 அரைசதங்களும் அடங்கும். 311 ஒருநாள் போட்டிகளில் ஆடி 11 ஆயிரத்து 363 ரன்களையும் குவித்துள்ளார். அவற்றில் 22 சதங்களும், 72 அரைசதங்களும் அடங்கும். ராகுல் டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13 ஆயிரத்து 288 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 36 சதங்களும், 63 அரைசதங்களும் அடங்கும். 344 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10 ஆயிரத்து 899 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 12 சதங்களும், 83 அரைசதங்களும் அடங்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்