Ashwin: உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் அண்ணா - உற்சாகத்தில் ரசிகர்கள்..!
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வின் இடம்பிடித்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில், உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்த அக்ஷர் படேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தொடர் உலகக்கோப்பை தொடர் ஆகும். டி20 உலகக்கோப்பை தொடரை காட்டிலும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. வரும் அக்டோபர் 5-ந் தேதி இந்தியாவில் நடப்பு உலகக்கோப்பைத் தொடர் தொடங்க உள்ளது.
உலகக்கோப்பைக்கான இந்திய அணி:
இந்தியா உள்பட 10 அணிகள் மோதும் இந்த தொடருக்காக பல அணிகளும் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், உலகக்கோப்பைக்கான இந்திய அணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ரோகித்சர்மா தலைமையிலான அந்த அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுபவமிக்க ஆல்ரவுண்டர் அஸ்வின் இடம்பிடிக்காதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும், கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கான கடைசி நாள் இன்று என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அஸ்வின்:
இதில், ஆசிய கோப்பைத் தொடரில் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த அக்ஷர் படேல் இடம்பிடிப்பாரா? என்று கேள்வி எழுந்தது. ஆனால், அவர் இன்னும் காயத்தில் இருந்து குணம் அடையாததாலும். அவர் உடல் தகுதி பெறாத காரணத்தாலும் அவருக்கு பதிலாக அஸ்வின் களமிறக்கப்பட்டுள்ளார்.
15 பேர் கொண்ட இந்திய அணி கீழே வருமாறு: கேப்டன் ரோகித்சர்மா, சுப்மன்கில்,. விராட்கோலி. ஸ்ரேயாஸ் ஐயர், இஷான்கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், பும்ரா.
ஆல்ரவுண்டர்:
சிறந்த ஆல்ரவுண்டரான அஸ்வின் 115 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 அரைசதம் உள்பட 707 ரன்களை எடுத்துள்ளார். சிறந்த சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் 155 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக 25 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 65 டி20 போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகளையும், 94 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 489 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
நெருக்கடியான நேரத்தில் பேட்டிங்கில் கைகொடுக்கும் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 5 சதம், 14 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 185 ரன்கள் எடுத்துள்ளார். டி20யில் 184 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய மண்ணில் சிறந்த அனுபவம் கொண்ட அஸ்வின் அணியில் இருப்பது நிச்சயம் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க: Pakistan Visit: இந்தியா வந்த பாபர் படை.. பாகிஸ்தான் கொடியுடன் வந்த ரசிகர் - ஹைதராபாத் விமான நிலையத்தில் பரபரப்பு
மேலும் படிக்க: Watch Video: நீ மனுஷன்யா..! ஸ்டாண்ட் இன் கேப்டன் ராகுலுக்கே முன்னுரிமை.. கோப்பையை வாங்கமறுத்த ரோஹித் சர்மா..!