SA vs AFG, Match Highlights: சுழலில் சுருட்ட நினைத்த ஆஃப்கானுக்கு ஆப்பு அடித்த தென்னாப்பிரிக்கா; 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
SA vs AFG, Match Highlights: ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் சேர்த்தது. 97 ரன்கள் எடுத்த ஒமர்சாய் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரினை எட்டினார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில் அனைத்து அணிகளும் தற்போது தங்களது கடைசி லீக் போட்டிகளை விளையாடி வருகின்றது. இதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் நான்காவது அணியாக நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதால், இன்று முதல் அதாவது நவம்பர் 10ஆம் தேதி முதல் நடைபெறும் அனைத்து போட்டிகளும் அட்டவணைப்படி நடைபெறுமே தவிர, தொடரில் தாக்கத்தினை ஏற்படுத்தாது.
இந்நிலையில் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் களமிறங்கின. டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் சேர்த்தது. இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் குயிண்டன் டிகாக் இந்த போட்டியில் மட்டும் மொத்தம் 6 கேட்ச்சுகள் பிடித்தார். சிறப்பாக விளையாடி 97 ரன்கள் சேர்த்த ஒமர்சாய் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரினை எட்டினார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஒமர்சாய் 107 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார். அதேபோல் தென்னாப்பிரிக்காவின் அதிவேகப் பந்து வீச்சாளர் கோட்ஸீ 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இவர் அதிகபட்சமாக மணிக்கு 149 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார்.
அதன் பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்தில் அதிரடியாக ஆடியது. தென்னாப்பிரிக்கா அணி இந்த தொடர் முழுவதும் இலக்கை துரத்தி வெற்றி பெறுவதில் சிக்கல்களைச் சந்தித்து வருவதால், இந்த போட்டி அதனை மாற்றி அமைக்கும் என யோசிக்கும் அளவிற்கு அதிரடியாக ரன்கள் குவித்தனர் தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஜோடிகள். ஆனால் இவர்களின் விக்கெட்டினை முஜூப் மற்றும் நபி கைப்பற்ற, தென்னாப்பிரிக்கா அணியின் தடுமாற்றம் தொடங்கியது.
தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான வன் டர் டசன் தனது பொறுப்பான ஆட்டத்தினால் அரைசதம் விளாசி தென்னாப்பிரிக்கா அணி இலக்கை எட்ட முக்கிய காரணமானார். அதேபோல் தொடக்க ஆட்டக்கார் டி காக் தனது விக்கெட்டினை 47 பந்தில் 43 ரன்கள் சேர்த்தது, தென்னாப்பிரிக்கா இலக்கை நோக்கி முன்னேற முக்கிய காரணமாக அமைந்தது.
ஆஃப்கானிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் சிறப்பாக பந்து வீசி தென்னாப்பிரிக்கா அணிக்கு நெருக்கடி மேல் நெருக்கடியை கொடுத்துவந்தது. இதனால் பலமான தென்னாப்பிரிக்கா அணி 245 ரன்கள் என்ற இலக்கை மிகவும் மந்தமாகவே ரன்கள் சேர்த்து வந்தது. ஆஃப்கானிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் தொடரை வெற்றியுடன் முடிக்க போராடியது. ஆனால் தென்னாப்பிரிக்கா அணி இறுதிகட்டத்தில் அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றது. 47.3 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் சேர்த்து வெற்றியை தனதாக்கியது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது தென்னாப்பிரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் வன் டர் டசனுக்கு வழங்கப்பட்டது. இவர் 95 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார்.