WC 2023 Semi Final: உலகக் கோப்பை அரையிறுதி - இந்தியாவுடன் மோதப்போவது யார்? மல்லுக்கட்டும் 3 அணிகள்
world cup 2023 Semi Final: உலகக் கோப்பை அரையிறுதிக்கு மூன்று அணிகள் முன்னேறிவிட்ட நிலையில், இந்தியா உடன் மோதுவதற்கான நான்காவது இடத்தை பிடிக்க 3 அணிகள் மல்லுக்கட்டி வருகின்றன.
world cup 2023 Semi Final: உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேற மீதமுள்ள ஒரு இடத்திற்கு முன்னேற, மற்ற அணிகளுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து இங்கு அறியலாம்.
உலகக் கோப்பை 2023 அரையிறுதி:
இந்தியாவில் கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட்டின், லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது வரை இந்தியா, தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. லீக் சுற்று முடியும்போது இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பது உறுதியாகிவிட்டது. இதனால், நான்காவது இடத்தை பிடிக்கும் அணியை எதிர்த்து தான், இந்திய அணி தனது அரையிறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. அந்த நான்காவது இடத்திற்கு தான் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கடுமையாக மோதி வருகின்றன. இதனால் அந்த அணிகளுக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன என்பதை சற்றே விரிவாக ஆராயலாம்.
நியூசிலாந்து அணிக்கான வாய்ப்பு:
தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த நியூசிலாந்து அணி, கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியுற்றுள்ளது. இதனால் 8 புள்ளிகளுடன் +0.398 ரன் ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதனால், அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய, இலங்கை அணிக்கு எதிரான கடைசி போட்டியில் பிரமாண்ட வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணிக்கான வாய்ப்பு:
அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணியை அடுத்தடுத்து வீழ்த்தியதன் மூலம், அரையிறுதிக்கான போட்டியில் இன்னும் தொடர்கிறது. தற்போது 8 புள்ளிகள் மற்றும் +0.036 ரன் ரேட்டுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தனது கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை அதிகப்படியான ரன்கள்/ விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை நியூசிலாந்து அணி தனது கடைசி லீக் போட்டியில் தோல்வியுற்றால், பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் வெற்றி பெற்றாலே போதுமானது.
ஆப்கானிஸ்தான் வாய்ப்பு:
யாரும் எதிர்பாராத விதமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விளையாடிய 8 லீக் போட்டிகளில் நான்கில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 8 புள்ளிகள் மற்றும் -0.338 ரன் ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. தனது கடைசி லீக் போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் அணி பிரமாண்ட வெற்றியை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். அல்லது நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களது கடைசி லீக் போட்டிகளில் தோல்வியுற்று, ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் நான்காவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெறக்கூடும்.