World Cup 2023 Prize Money: ”காத்திருக்கும் ஜாக்பாட்”.. உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை இத்தனை கோடியா?
ODI World Cup 2023 Prize Money: கோப்பையை வெல்லும் அணிக்கு கொடுக்கப்படும் பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்து இணையத்தில் பரவலாக தேடப்படுகிறது.
ODI World Cup 2023 Prize Money: இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பையில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டி குறித்துதான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பேசிக்கொண்டு உள்ளது. இந்நிலையில் கோப்பையை வெல்லும் அணிக்கு கொடுக்கப்படும் பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்து இணையத்தில் பரவலாக தேடப்படுகிறது.
கோப்பையை வெல்லும் அணிக்கு கோப்பையுடன் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. அதாவது இன்றைய இந்திய மதிப்பில் ரூபாய் 33 கோடியே 17 லட்சம் வருகிறது. இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது. அதேபோல் அரையிறுதிச் சுற்றில் வெளியேறும் இரண்டு அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படவுள்ளது.
அதேபோல், லீக் போட்டிகளில் வெற்றி பெறும் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு போட்டிக்கும் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படவுள்ளது. அதேபோல், கால் இறுதி ஆட்டத்தில் அதாவது குரூப் ஸ்டேஜுக்கு தகுதி பெறும் ஒவ்வொரு அணிக்கும் தலா 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐசிசி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பிலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
போட்டி வகை | அணிகள் | தொகை | மொத்தம் |
2023 ஐசிசி உலகக் கோப்பை வென்றவர் | 1 | $ 4,000,000 | $ 4,000,000 |
ஐசிசி உலகக் கோப்பை ரன்னர்-அப் | 1 | $ 2,000,000 | $ 2,000,000 |
ஐசிசி உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி | 2 | ஒவ்வொன்றும் $800,000 | $ 1,600,000 |
ஒவ்வொரு லீக் நிலை போட்டியிலும் வெற்றி பெற்றவர்கள் | 45 | ஒவ்வொன்றும் $40,000 | $ 1,800,000 |
குழு அளவிலான அணிகள் | 6 | ஒவ்வொன்றும் $100,000 | $ 600,000 |
மொத்தம் | $10,000,000 |
தொடங்கிய இடத்திலேயே முடிவு
அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனாக இருந்த இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியுடன் 2023 உலகக் கோப்பை போட்டி தொடங்கியது. அதே மைதானத்தில் தான் நாளை (நவம்பர் 19) இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றது.
நாக் அவுட் சுற்றுகள்:
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 6 அணிகள் வெளியேறிய நிலையில் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இதில் நவம்பர் 15 புதன்கிழமை மும்பையில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டியில் இந்தியா வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் சென்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது.
இவ்விரு அணிகளும் நவம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டியில் நாளை மோதுகிறது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. ஒருவேளை நாளைய போட்டியில் மழை குறுக்கிட்டால் நாளை மறுநாள் ரிசர்வ் டே அடிப்படையில் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.