ODI WC 2023 England Team: நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இங்கிலாந்து - உலகக் கோப்பையில் அணியின் சாதக, பாதகங்கள் என்ன?
உலக்கக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தொடர்பாக, இந்த தொகுப்பில் அறியலாம்
ODI WC 2023 India Team: உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் விவரங்கள் மற்றும் போட்டி நடைபெறும் மைதானங்கள் உள்ளிட்ட மொத்த விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன.
உலகக்கோப்பை தொடர்:
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள, ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் 5ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் மோதும் இந்த கிரிக்கெட் திருவிழாவை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்தியாவிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனிடையே, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதன்படி, அந்த அணியின் பலம், பலவீனம், எதிர்த்து விளையாட உள்ள அணிகளின் விவரங்கள், விளையாட உள்ள மைதானங்கள் உள்ளிட்ட மொத்த விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இங்கிலாந்து அணி வீரர்கள்:
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில், மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க்வுட், கிறிஸ் வோக்ஸ் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணியின் பலம்:
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து இந்த ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் அதிரடியான தொடக்க ஆட்டக்காரர்கள் தான். ஜானி பேர்ஸ்டோ மற்று டேவிட் மாலன் ஆகிய இருவருமே அதிரடியாக ஆடுவதில் வல்லவர்கள். அதோடு எத்தகைய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதிலும் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர். பேர்ஸ்டோ காயத்தில் இருந்து மீண்டு வந்து சற்றே அவதிப்பட்டாலும், அணி நிர்வாகம் அவர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அறிவித்த முடிவை உலகக்கோப்பைக்காக திரும்பப் பெற்ற பென்ஸ் டோக்ஸ், கேப்டன் ஜோஸ் பட்லர், லிவிங்ஸ்டோன் மற்றும் மொயீன் அலி ஆகியோர் இங்கிலாந்தின் மிடில் ஆர்டரை மிகவும் பிரமாண்டமாக வலுப்படுத்தியுள்ளனர். ஆட்டத்தின் போக்கையே தனி ஆளாக மாற்றும் திறன் கொண்ட, பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், மொயீன் அலி, லிவிங்ஸ்டன் மற்றும் க்ரிஷ் வோக்ஸ் போன்ற ஆல்-ரவுண்டர்கள் இருப்பது அந்த அணிக்கு யானை பலமாக கருதப்படுகிறது. ரீஸ் டாப்லி மற்றும் மார்க்-வுட் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் நம்பிக்கை அளிக்கின்றனர்.
இங்கிலாந்து அணியின் பலவீனம்:
இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய பலவீனமாக கருதப்படுவது வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் தான். ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேசன் ராய் போன்ற முக்கிய வீரர்கள், காயம் காரணமாக நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகி இருப்பது பின்னடைவாக கருதப்படுகிறது. சுழற்பந்து விச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் விளையாட, அடில் ரஷீத், லிவிங்ஸ்டோன் மற்றும் மொயீன் அலி ஆகிய 3 பேர் இங்கிலாந்து அணியில் உள்ளனர். இவர்களில் ரஷீத் மட்டுமே முழுநேர சுழற்பந்து விச்சாளர் ஆவார். இதனால், இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு பிரிவு சற்று பலவீனமாகவே உள்ளது. பேட்டிங் லைன்-அப் பலமானதாக இருந்தாலும், இங்கிலாந்து வீரர்களுக்கு சுழற்பந்துவீச்சை சமாளிப்பது என்பது சவாலானதாகவே உள்ளது. எதிரணிகளில் உள்ள குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷாகிப் அல் ஹசன், ரஷித் கான், முஜீப்-உர்-ரஹ்மான், மற்றும் துனித் வெல்லலகே ஆகியோர் இங்கிலாந்து வீரர்களை சோதிக்கக் கூடும். அதோடு, இந்திய மண்ணில் 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து, வெறும் 26 போட்டிகளில் மட்டுமே வென்று மோசமான வரலாற்றை தொடர்கிறது. இது அந்த அணியின் சுழற்பந்து வீச்சுக்கு எதிரான மோசமான செயல்பாட்டை காட்டுகிறது.
இங்கிலாந்து அணியின் போட்டி விவரங்கள்:
தேதி | போட்டி விவரங்கள் | மைதானம் |
அக்டோபர் 5 | இங்கிலாந்து - நியூசிலாந்து | அகமதாபாத் |
அக்டோபர் 10 | இங்கிலாந்து - வங்கதேசம் | தர்மசாலா |
அக்டோபர் 15 | இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் | டெல்லி |
அக்டோபர் 21 | இங்கிலாந்து - தென்னாப்ரிக்கா | மும்பை |
அக்டோபர் 26 | இங்கிலாந்து - இலங்கை | பெங்களூரு |
அக்டோபர் 29 | இங்கிலாந்து - இந்தியா | லக்னோ |
நவம்பர் 4 | இங்கிலாந்து - ஆஸ்திரேலியா | அகமதாபாத் |
நவம்பர் 8 | இங்கிலாந்து - நெதர்லாந்து | புனே |
நவம்பர் 11 | இங்கிலாந்து - பாகிஸ்தான் | கொல்கத்தா |
உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி:
கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு என கூறப்பட்டாலும் , பல தசாபதங்களை கடந்த போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2019ம் ஆண்டு தான் இங்கிலாந்து தனது முதல் ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது. உலகக்கோப்பையின் அனைத்து தொடர்களிலும் விளையாடிய அந்த அணி, 1979, 1987 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினாலும், இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது.