AFG vs NED: அரையிறுதி ஆசையில் ஆப்கானிஸ்தான்.. தடைபோடுமா நெதர்லாந்து.. இன்று யாருக்கு வெற்றி..?
லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பை 2023ன் 34வது ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து இடையே இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியானது லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு அணிகளும் தங்களது முந்தைய ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற நம்பிக்கையில் இன்று களமிறங்குகின்றன.
ஆப்கானிஸ்தான் தனது முந்தைய ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது. அதில், இலங்கையை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. மறுபுறம், நெதர்லாந்து தாங்கள் விளையாடிய கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டு 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஆப்கானிஸ்தான் தற்போது உலகக் கோப்பை 2023 புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான கடைசி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டெல்லியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி உலக கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தது. நெதர்லாந்துக்கு எதிரான வெற்றி பாகிஸ்தானை ஐந்தாவது இடத்திலிருந்து கீழே தள்ள முடியும். ஆப்கானிஸ்தான் இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் ஏழு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று பாகிஸ்தான் சிக்கலில் உள்ளது.
மறுபுறம், நெதர்லாந்து ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் பத்து அணிகள் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தியது. நெதர்லாந்து இன்னும் இரண்டு வெற்றிகள் பெற்றால், முதல் எட்டு இடங்களுக்கு முன்னேறி 2025 இல் ICC சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறவும் உதவும்.
லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் கலக்கி வருகிறது.
பிட்ச் எப்படி..?
இன்று போட்டி நடைபெறும் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள மேற்பரப்பு பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அதன்படி, சுழற்பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்துவீச்சு மூலம் பல ஜாலங்கள் செய்வார்கள். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து, இலக்கை துரத்துவது சிறப்பானதாக இருக்கும்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
போட்டிகள்: 9 ஆப்கானிஸ்தான் வென்றது: 7 நெதர்லாந்து வென்றது: 2
மழைக்கு வாய்ப்பா..?
நவம்பர் 3, வெள்ளிக்கிழமை லக்னோவில் மழை பெய்ய வாய்ப்பில்லை. ஈரப்பதம் 47 சதவீதத்துடன், லக்னோவில் வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். தரையில் காற்றின் வேகம் மணிக்கு 10 கி.மீ வரை மட்டுமே இருக்கும்.
கணிக்கப்பட்ட இரு அணி விவரங்கள்:
ஆப்கானிஸ்தான் (AFG):
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், நூர் அகமது
நெதர்லாந்து (NED):
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், வெஸ்லி பாரேசி, கொலின் அக்கர்மன், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), பாஸ் டி லீட், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ஷாரிஸ் அகமது, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்