பிராட்மேன், கோலி சாதனையை சமன் செய்த வில்லியம்சன்! வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்து அசத்தல்!
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் சதமடித்து டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 29வது சதத்தை பூர்த்தி செய்தார்.
நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதே அணி தன்னுடைய முதல் இன்னிங்சில் மகமுதுல்லின் அபார பேட்டிங்கால் 310 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வில்லியம்சன் 29வது சதம்:
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லாதம் 21 ரன்களிலும், கான்வே 12 ரன்னிலும் அவுட்டாக அடுத்து வந்த நிகோல்ஸ் 19 ரன்களில் அவுட்டானார். மிட்செல்லுடன் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் அபாரமாக ஆடினார். மிட்செல் ஒருநாள் போட்டி போல ஆட, வில்லியம்சன் தனி ஆளாக போராடினார். மிட்செல் 54 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 41 ரன்கள் எடுக்க, விக்கெட் கீப்பர் ப்ளண்டல் 6 ரன்களில் அவுட்டானார்.
பின்னர், பிலிப்ஸ் ஒத்துழைப்பு தர வில்லியம்சன் அபாரமாக ஆடி சதம் அடித்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வில்லியம்சன் அடிக்கும் 29வது சதம் இதுவாகும். சிறப்பாக ஆடி சதம் அடித்த வில்லியம்சன் 205 பந்துகளில் 9 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 104 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசியில் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்திருந்தது.
கோலி - பிராட்மேன் சாதனை சமன்:
உலக கிரிக்கெட் அரங்கில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் வில்லியம்சன் இன்று சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி மற்றும் பிராட்மேன் சத சாதனையை சமன் செய்துள்ளார். பிராட்மேன் 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 29 சதங்களை விளாசியுள்ளார். விராட் கோலி 111 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 29 சதங்களை விளாசியுள்ளார்.
33 வயதான வில்லியம்சன் 95 டெஸ்ட் போட்டிகளில் ஆடி தன்னுடைய 29வது சதத்தை இன்று பூர்த்தி செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் ஆடும் வீரர்களில் தற்போது அதிக டெஸ்ட் விளாசிய வீரராக ஸ்மித் 32 சதத்துடன் உள்ளார். ரூட் 30 சதங்களுடன் உள்ளார். வில்லியம்சன், விராட் கோலி 29 சதங்களுடன் உள்ளனர்.
44 ரன்கள் பின்தங்கிய நிலை:
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தற்போது 44 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கேப்டன் சவுதி 1 ரன்னுடனும், ஜேமிசன் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இரு அணிகளுக்கும் இடையோன ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வில்லியம்சன் 95 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 29 சதங்கள், 6 இரட்டை சதங்கள், 33 அரைசதங்கள் உள்பட 8 ஆயிரத்து 228 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 251 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க: Rahul Dravid: ராகுல் டிராவிட் தான் பயிற்சியாளர்.. பதவிக்காலத்தை நீட்டித்து பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
மேலும் படிக்க: Glenn Maxwell: அடிக்கப்பட்ட ஒரே ஒரு சதம்.. மேக்ஸ்வெலுக்கு குவிந்த பல்வேறு சாதனைகள்.. அதுக்குன்னு இத்தனையா?