NZ Vs Afg World Cup 2023: உலகக் கோப்பையில் நியூசிலாந்தின் தொடர் வெற்றியை தடுக்குமா ஆப்கானிஸ்தான்? - சென்னையில் பலப்பரீட்சை
NZ Vs Afg World Cup 2023: ஐசிசி உலகக் கோப்பையின் இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
NZ Vs Afg World Cup 2023: சென்னையில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின் 16வது லீக் போட்டியில், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், தற்போது வரை 15 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து, புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் மோதல்:
சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இதுவரை விளையாடிய 3 லீக் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. மறுமுனையில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்த ஆப்கானிஸ்தான், கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. அந்த உத்வேகத்தில் இன்றைய போட்டியில் அந்த அணி களமிறங்க உள்ளது.
பலம் & பலவீனங்கள்:
நியூசிலாந்து அணி பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என மூன்று யூனிட்டிலும் சிறந்து விளங்குகிறது. கேப்டன் வில்லியம்சன் இல்லாவிட்டாலும் டாம் லாதம், அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். நடப்பு தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத அணிகளில் ஒன்றாக உள்ளது. மறுமுனையில் சுழற்பந்துவீச்சை தனது முதன்மையான ஆயுதமாக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி களமாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியாவிட்டாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றி ஆப்கானிஸ்தான் அணிக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சென்னை மைதானத்தில் போட்டி நடைபெறுவதால், ரஷித் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் நியூசிலாந்திற்கு கடும் நெருக்கடி தரக்கூடும். பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரரான குர்பாஸ் நம்பிக்கை நட்சத்திரமாக த்கழ்கிறார்.
நேருக்கு நேர்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த இரண்டிலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது.
மைதானம் எப்படி?
சென்னை சிதம்பரம் மைதானம் வழக்கமான சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதேநேரம், போட்டியின் போக்கில் இரண்டாம் பாதியில் வேகப்பந்து வீச்சாளர்களும் ஏதுவாக மாறும். பகல் நேரங்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி தரக்கூடும் என்பதால், சென்னை மைதானத்தில் சேசிஸ் செய்வது சற்று எளிதானதாக இருக்கும்.
உத்தேச அணி விவரங்கள்:
நியூசிலாந்து:
டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்
ஆப்கானிஸ்தான்:
ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, இக்ராம் அலிகில், முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி