New Head Coach:ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் புதிய பயிற்சியாளர்;வெளியான அறிவிப்பு!
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் புதிய பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரி கிறிஸ்டன் விலகல்:
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தது. ஏனெனில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியானது, நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறாமால் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது.
அந்தவகையில் கேப்டன், அணியின் பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இதனால் பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் கேரி கிறிஸ்டன் தேர்வுசெய்யப்பட்டார். அதேசமயம், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பியும் நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி குரூப் சுற்றுடன் வெளியேறியது.
அதன் பின் பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன. இதில் கேரி கிர்ஸ்டன் பங்கு பெரிதாக இல்லை. மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போதே பாகிஸ்தான் அணியில் உள்ள வீரர்கள் இரு குழுக்களாக பிரிந்துள்ளனர் என்பதையும் அவர் உறுதிசெய்திருந்தார்.
அதன்பின்னர் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடர்களில் விளையாடி வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அணித் தேர்விலும் கேரி கிர்ஸ்டன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. மேற்கொண்டு அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வானையும், துணைக்கேப்டனாக சல்மான் அலி அகாவுமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளதிலும் கேரி கிறிஸ்டனுக்கு விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது.
ஜேசன் கில்லெஸ்பி நியமனம்:
இந்நிலையில், பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் தலைமை பயிற்சியாளரான கேரி கிறிஸ்டன் பதவி விலக உள்ளார். அவர் கடந்த ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறியது.
மேலும் கேரி கிறிஸ்டன் எடுத்த முடிவுகள் பலவற்றுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது.இதன் காரணமாக அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இவரது ராஜினாமாவை பாகிஸ்தான் நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இவரது விலகலை அடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். கில்லெஸ்பி ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.