சாதி வசவு விவகாரம் : "அவதூறு அரசியல் பேசுவதற்கு ஆதித்தாய் தி.மு.க." - சீமான் குற்றச்சாட்டு
அவதூறு பேசுவது, அநாகரீகமான அரசியல் பேசுவதற்கு ஆதித்தாய் தி.மு.க.தான் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளமார்.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, இரண்டாவது நாளுக்கு முன்பு என் தம்பி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அந்த மேடையில் துரைமுருகன் பாடிய பாடல் உண்மையிலே அவருக்கு தெரியாது. அந்த பாட்டை எழுதி, மெட்டமைத்தது அ.தி.மு.க. ஜெயலலிதா இருந்தபோது பல நூற்றுக்கணக்கான மேடையில் இந்த பாடல் பாடப்பட்டுள்ளது. இதே கருத்து சொல்லப்பட்டுள்ளது.
அவதூறு அரசியலுக்கு ஆதித்தாய் தி.மு.க.:
அன்றெல்லாம் இவர்களுக்கு வருத்தமோ, கோபமோ தெரியவில்லை. திருப்பி நாங்கள் பாடும்போது அப்படி ஆகிவிட்டது, இப்படி ஆகிவிட்டது என்று கூறுகிறார்கள். அவதூறு பேசுவது, அசிங்கமான அரசியல் பேசுவதற்கு ஆதித்தாய் தி.மு.க. ஒவ்வொரு தலைவர்களை பற்றி, கருணாநிதி பேசியதே இருக்கிறது.
இந்திராகாந்தி பற்றி, ஜெயலலிதா பற்றி பேசியுள்ளனர். ஐயா எம்.ஜி.ஆரைப் பற்றி ஆண்மகன் அற்றவர் என்றெல்லாம் கொடுமையாக பேசியது விமர்சனங்களை எல்லாம் வைத்துள்ளனர். எந்த கட்சியில் இழிவாக பேசுவதற்கு பேச்சாளர்களை வைத்துள்ளனர் என்றால் இவர்கள்தான். வெற்றி கொண்டான் மேடையில் ஜெயலலிதாவை பேசியது எல்லாம் இப்போது பேசிக்காட்ட முடியாது.
சண்டாளன் சமூகம் இருப்பது எனக்குத் தெரியாது:
இப்போது, அந்த கட்சியில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் மாற்றுக்கட்சியில் இருப்பவர்கள் மாற்றுக்கட்சியினரை பேசுவதை எல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள். நாகரிக அரசியல் பற்றி, கண்ணியமான அரசியல் பற்றி கற்றுக்கொடுப்பதற்கு, அடுத்தவர்களுக்கு கற்றுத் தருவதற்கு துளியளவும் தகுதியற்ற கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது தி.மு.க. கிராமங்களில் சண்டாளன் என்பது ஒரு பேச்சுவழக்கு ஆகும்.
படங்களில் கூட சண்டாளி என்று பாடல் வரிகள் கூட உள்ளது. நான் எடுத்த பாஞ்சாலங்குறிச்சி படத்தில் சண்டாளா என்று வடிவேலு நடித்த காட்சியில் இருந்தது. அப்போது எனக்கு உண்மையிலே தெரியாது. படம் வெளியான பிறகு எனக்கு கடிதம் வந்தது. அப்போதுதான் எனக்கு இந்த பெயரில் ஒரு சமூகம் இருக்கிறது என்று தெரியும். அதன்பின்பு, நாங்கள் அதைப்பயன்படுத்தி பயன்படுத்தவில்லை.
சண்டாளன் வார்த்தையை பயன்படுத்திய கருணாநிதி:
சண்டாளன் என்ற வார்த்தையை அதிகளவில் பயன்படுத்தியது கருணாநிதியே ஆகும். சங்க இலங்கியங்களில், மந்திரங்களில், திருமூலர் கூட சண்டாளன் என்ற வார்த்தை பயன்படுத்தியுள்ளனர். கந்தசஷ்டி கவசத்தில் கூட இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர். அவரது படத்தில் கூட சண்டாளன் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளார். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக அ.தி.மு.க. கருத்து தெரிவித்தபோது அவர் சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். ஒரு தாழ்த்தப்பட்டவர் நீதிபதியானது அவரது தகுதியால் ஆகவில்லை. இதனால்தான் ஆனார். நாங்கள் போட்ட பிச்சை என்று ஆர்.எஸ்.பாரதி பேசியது? சண்டாளன் என்பதற்கு நாங்கள் என்ன செய்தோம். இருக்கிற பாட்டு.
நாங்கள் பாடவில்லை:
அந்த பாடலை நாங்கள் பாடவில்லை. என் தம்பி சாட்டை துரைமுருகனும் பாடவில்லை. அதை எழுதி வெளியிட்டது அ.தி.மு.க. அப்போது எல்லாம் காதில் பஞ்சு வைத்து கவிழ்ந்து படுத்து இருந்தீர்களா? நீங்கள் இந்த மண்ணுக்குச் செய்த அக்கிரமங்களை, இந்த மண்ணுக்குச் செய்த துரோகங்களை பட்டியலிட்டு பேசலாமா? யார் என்கூட தர்க்கம் செய்ய வருகிறீர்கள்? அவர்களுக்கு ஆதரவாக பேசும் யூடியூபர்கள் பேசும்போது இனிக்குது. நாங்கள் பேசும்போது நெஞ்செல்லாம் புண்ணாகிவிடுகிறது.“
இவ்வாறு அவர் பேசினார்.