MS Dhoni: ”அந்த நாள்; நெஞ்சம் உடைந்த தருணம்; அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” உருகிய எம்.எஸ்.தோனி
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தோல்விதான் என் நெஞ்சத்தை உடைத்த தருணம் என்று எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.
2019 உலகக் கோப்பை:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற பெருமைக்குரியவர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது தான் இவருடைய கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.
இந்த போட்டியின் போது வெற்றிக்கு 12 பந்துகளில் 31 ரன்கள் இந்திய அணிக்கு தேவைப்பட்ட போது களத்தில் தோனி நின்றதால் ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால் தோனி 49 வது ஓவரின் இரண்டாவது பந்தில் ரன் அவுட் ஆனார். இது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஆறாத ரணமாக மாறியது. அதேபோல் தான் தோனிக்கும் நெஞ்சை உடைத்த தருணமாக அதை அமைந்திருக்கிறது. இது தொடர்பாக அண்மையில் ஒரு பேட்டியில் தோனி பேசி இருக்கிறார்.
நெஞ்சை உடைத்த தருணம்:
அதில், "அது மிகவும் கடினமானது. ஏனெனில் அதுவே என்னுடைய கடைசி உலகக் கோப்பை என்பது எனக்குத் தெரியும். அதில் வெற்றி பெறுவது நன்றாக இருந்திருக்கும். ஆனால் அது நெஞ்சம் உடைந்த தருணம். எனவே தோல்வியை ஒப்புக்கொண்டு நாங்கள் முன்னோக்கி நகர முயற்சித்தோம். அதிலிருந்து மீள்வதற்கு நிறைய நேரம் தேவைப்பட்டது.
அதன் பின் நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பதால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. ஆம் அது என்னுடைய மனமுடைந்த தருணம். ஆனால் நீங்கள் அதிலிருந்து நகர வேண்டும். நீங்கள் சிறந்ததை முயற்சித்தீர்கள். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அதை ஒப்புக்கொள்ள வேண்டும்”என்று எம்.எஸ்.தோனி கூறியுள்ளார். தோனியின் கிரிக்கெட் வாழ்வில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டி ஒரு கருப்பு புள்ளியாகவே அமைந்து விட்டது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Shah Rukh Khan: பஞ்சாப் அணி உரிமையாளரிடம் எகிறிய ஷாருக்கான் - ஐபிஎல் ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?
மேலும் படிக்க: Rinku Singh: "எதிர்பார்க்கவே இல்லை" பந்துவீசியது குறித்து மனம் திறந்த ரிங்குசிங்!