Shah Rukh Khan: பஞ்சாப் அணி உரிமையாளரிடம் எகிறிய ஷாருக்கான் - ஐபிஎல் ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?
Shah Rukh Khan: ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் பஞ்சாப் உரிமையாளரிடம், ஷாருக்கான் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Shah Rukh Khan: ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில், வீரர்களை தக்கவைக்கும் விதி தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் வீரர்களை தக்கவைக்கும் விதி:
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், அடுத்த ஆண்டிற்கான பணிகளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. அதில் முக்கிய நடவடிக்கையாக, வீரர்களுக்கான மெகா ஏலத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. அதேநேரம், அதிகபட்சமாக ஒவ்வொரு அணியும் 4 வீரர்களையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 5 முதல் 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என, சில அணி நிர்வாகங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன. சில அணிகள் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தான், ஐபிஎல் அணி உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்:
மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், டெல்லி அணி சார்பாக கிரண் குமார் கிராந்தி, லக்னோ அணி சார்பாக சஞ்சீவ் கோயங்கா, சென்னை அணி சார்பாக ரூபா குருநாத், ஐதராபாத் அணி சார்பாக காவ்யா மாறன் மற்றும் ராஜஸ்தான் அனி சார்பாக மனோஜ் படலே ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டனர். அதேநேரம், மும்பை அணி சார்பில் நீதா அம்பானி உள்ளிட்டோர் காணொலி வாயிலாக கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் உரிமையாளருடன் ஷாருக்கான் வாக்குவாதம்:
கூட்டத்தில் பேசிய பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான நெஸ் வாடியா, “ஏற்கனவே திட்டமிட்டபடி மெகா ஏலம் நடத்தப்பட வேண்டும். நான்குக்கும் மேற்பட்ட வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்கக் கூடாது” என பேசியுள்ளார். ஆனால், இந்த கருத்துக்கு உடன்படாத கொல்கத்தா அணி உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான், நெஸ் வாடியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவரிடையேயான ஆவேசமான கருத்து பரிமாற்றங்களால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், கட்டாயம் கூடுதல் வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என ஷாருக்கான் திட்டவட்டமாக பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தக்க வைப்பு விதியில் மாற்று கருத்துகள் ஏன்?
ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்களை கொண்டு ஒரு வலுவான பிளேயிங் லெவனை கட்டமைக்க, ஒவ்வொரு அணிக்கும் 2-3 வருடங்கள் ஆகிறது. அப்படி அணியை தயார்படுத்தி வலுவாக திகழும் நிலையில், மொத்தமாக கலைத்து மெகா ஏலம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கொல்கத்தா உள்ளிட்ட அணி நிர்வாகங்கள் வலியுறுத்தி வருகின்றன. உதாரணமாக, நீண்டகால முயற்சிக்குப் பிறகு கொல்கத்தா வலுவான பிளேயிங் லெவன் கொண்டு, நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று முதலே ஆதிக்கம் செலுத்தி கோப்பையை வென்றதை கூறலாம். சென்னை அணியும் கூடுதல் வீரர்களை தக்கவைத்துக் கொள்ள ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் சில அணிகள் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகும், வலுவான பிளேயிங் லெவனை கட்டமைக்க முடியாமல் திணறுகின்றன. அதன் காரணமாகவே மெகா ஏலம் நடந்தால், புதிய வீரர்களை தேர்ந்தெடுத்து அணியை கட்டமைக்கலாம் என கருதுகின்றன. பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் தற்போது அந்த மனநிலையில் தான் உள்ளன என கூறப்படுகிறது. ஆனால், இந்த இரு அணிகளுமே ஏலத்தின் போது சரியாக செயல்படாது என்பதே வரலாறாக உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் கோப்பையையே வெல்லாத சில அணிகளில் இவையும் அடங்கும்.