Watch Video: மஹி பாய் கையெழுத்துக்கு மேல என் கையெழுத்தா..? முடியவே முடியாது... ரசிகரின் கோரிக்கை மறுத்த இஷான்!
கடந்த வாரம், 126 பந்துகளில் 200 ரன்கள் குவித்து, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த கிறிஸ் கெய்லின் சாதனையை இஷான் முறியடித்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் எங்கே சென்றாலும் அவர்களை கிரிக்கெட் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க ஆர்வம் காட்டுவர். அதேபோல், அவர்களது ஆட்டோகிராஃப் வாங்கவும் அதிகளவில் ஆர்வம் காட்டும் வீடியோவும் இணையத்தில் வைரலாகும். ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டோகிராஃப் வைத்திருந்தால் அதன் மதிப்பு கோடி ரூபாய் வைத்திருக்கும் அளவுக்கு பேசப்படும்.
அது காலப்போக்கில் மருவி போட்டோ, செல்பி என எடுத்து சமூக வலைத்தளங்களில் போட்டு பெருமை பெற்றுக்கொள்ளும் காலமாக வளர்ந்துவிட்டது. இந்தநிலையில், ஒரு ரசிகரின் வினோதமான ஆட்டோகிராப் கோரிக்கையால் அதிர்ச்சியடைந்த இஷான் கிஷான் ஒரு சங்கடமான சூழ்நிலையை சந்தித்தார்.
கடந்த வாரம் வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இரட்டை சதத்தை விளாசிய இந்திய இளம் வீரர், தனது சொந்த ஊரான ராஞ்சியில் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். போட்டி முடிந்தபிறகு உள்ளூர் ரசிகரான ரந்தீர் குமார் என்பவர் இஷான் கிஷானுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டார். தொடர்ந்து, இஷானின் ஆட்டோகிராப் பெற விரும்பிய ரசிகர், தனது மொபைலின் பின்புறத்தை திருப்பி கொடுத்தார்.
"Sorry I can't sign above @MSDhoni's Autograph" - Ishan Kishan ❤️pic.twitter.com/5b5yhuEC3X
— DHONI Era™ 🤩 (@TheDhoniEra) December 20, 2022
அந்த போனின் பின்புறத்தில் ஏற்கனவே முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் கையெழுத்து இடம் பெற்றிருந்தது. அதனால், இஷான் கிஷனால் கையெழுத்து போட முடியவில்லை. தொடர்ந்து ரசிகர் தோனியின் கையெழுத்துக்கு மேல் கையெழுத்து போடுமாறு அடம் பிடித்தார். அப்போது இஷான் கிஷன், தோனியின் மீதான மரியாதை நிமித்தம் காரணமாக அவர் கையெழுத்திட்ட இடத்தில் தன்னால் கையெழுத்திட முடியாது என்று தெளிவாக கூறினார்.
இந்த சம்பவம் முழுவதையும் மூத்த விளையாட்டு பத்திரிக்கையாளர் விமல் குமார் வீடியோவாக படம் பிடித்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டார். அந்த வீடியோவில், ” மஹி பாய் கையொப்பமிட்ட இடத்திற்கு மேல் என் கையெழுத்தை போட முடியாது. ஒரு காரியம் செய்யலாம். போனில் கையெழுத்து போடுவதற்கு பதிலாக நான் ஏன் வேறு ஏதாவது ஒன்றில் கையெழுத்து போட கூடாது” என இஷான் கிஷான் கூறினார். இருந்தாலும் ரசிகர் அசையாமல் நின்று அடம்பிடிக்க, தோனியின் கையெழுத்துக்குக் கீழே உள்ள குறுகிய இடத்தில் கையெழுத்திடுமாறு ரசிகர் இஷானை சமாதானப்படுத்தினார். இந்திய தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷனும் சிறு தயக்கத்துடன் நான் இன்னும் அந்த நிலைக்கு எட்டவில்லை. நான் தோனி பாய் கையெழுத்திட்ட இடத்திற்கு கீழே கையெழுத்திடுகிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து, கையெழுத்து கேட்டு அடம்பிடித்த ரசிகரிடம் இதுகுறித்து கேட்டபோது, நான் எனது செல்போனில் இஷான் கிஷனின் கையெழுத்தைப் பெற விரும்பினேன். இது கொஞ்சம் தனித்தன்மை வாய்ந்தது, இருவரும் ஜார்கண்ட் நட்சத்திரங்கள் என்பதால், நான் அதை செய்ய வேண்டியிருந்தது. தோனி மற்றும் இஷான் இருவரின் ஆட்டோகிராப் வைத்திருக்கும் பலர் உள்ளனர். இஷானை அவர் தொடங்கியதிலிருந்து நான் பார்த்திருக்கிறேன். 16 வயதுக்குட்பட்டோருடன் விளையாடுகிறேன். நான் இங்கு பணிபுரிந்து 5-6 வருடங்கள் ஆகிறது, அதனால் எனக்கு அவரைத் தெரியும், அவர் இன்னும் இந்த மைதானத்தை மதிக்கிறார், இது மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு தோனி சாரைத் தெரியும், தனிப்பட்ட முறையில் அல்ல, ஆனால் நான் அவரை அடிக்கடி இங்கு பார்ப்பேன்” என தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த வாரம், 126 பந்துகளில் 200 ரன்கள் குவித்து, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த கிறிஸ் கெய்லின் சாதனையை இஷான் முறியடித்தார். அவர் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்.