
Mohammed Shami ODI Record: அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்தியர்..! முகமது ஷமி புதிய சாதனை..!
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்தியர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டன் நகரின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பந்துவீசி வரும் இந்திய அணியின் பும்ராவும், ஷமியும் இங்கிலாந்து பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்தனர்.
இந்த போட்டியில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற அரிய சாதனையை படைத்தார். முன்னதாக, இந்த சாதனையை அஜீத் அகர்கர் 97 போட்டிகளில் படைத்து தன்வசம் வைத்திருந்தார். சர்வதேச அளவில் மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
முன்னதாக, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 77 ஆட்டங்களில் படைத்தார். அவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் 78 போட்டிகளில் கைப்பற்றியுள்ளார். மூன்றாவது இடத்தில் இருந்த ரஷீத்கான் 80 ஆட்டங்களில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனையை தற்போது முகமது ஷமி பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். நான்காவது இடத்தில் ட்ரெண்ட் போல்டும், 5வது இடத்தில் ப்ரெட்லீயும் உள்ளனர்.
லண்டன் ஓவலில் இன்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முகமது ஷமிபென்ஸ்டோக்சை டக் அவுட்டாக்கினார். அபாயகரமான கேப்டன் ஜோஸ் பட்லரை 30 ரன்களுக்கு காலி செய்தார். பின்னர், கிரெக் ஓவர்டனை 8 ரன்களுக்கு அவுட்டாக்கினார். இன்றைய போட்டியில் மட்டும் முகமது ஷமி 7 ஓவர்கள் வீசி 31 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
31 வயதான முகமது ஷமி இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான 60 டெஸ்ட் போட்டியில் ஆடி 216 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 79 ஒருநாள் போட்டியில் ஆடி 150 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். 17 டி20 போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 93 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 99 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

